உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

கோவை மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட உணவு மற்றும் சிறுதானிய பொருட்கள் பயன்பாடு குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நடந்தது.

இந்தியாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிகரித்து வருவதால், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்திலும் கடந்த மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்வுகளும், செயல்முறை விளக்க நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தலின் பேரில், கோயம்புத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் தமிழ்செல்வன் தலைமையில் செறிவூட்டப்பட்ட உணவு மற்றும் சிறுதானிய பொருட்கள் பயன்பாடு குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அரிசி, சமையல் எண்ணெய், பால், கோதுமை மாவு மற்றும் உப்பு ஆகிய ஐந்து உணவுப் பொருட்களில் உணவு செறிவூட்டல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

நேரடியான செய்முறை பயிற்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் 10 வகையான சிறுதானிய உணவுகளை சமைத்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினர்.

இக்கூட்டத்தில் சிறுதானிய உணவுகளில் உள்ள சத்துக்களைப் பற்றியும் அவற்றால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும் அனைவரும் சிறுதானியங்களை வாரம் இருமுறையாவது பயன்படுத்த வேண்டும் மற்றும் நம் வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறுதானிய உணவுகளை பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறுதானிய உணவு வகைகளை வாரம் இருமுறையாவது குழந்தைகள் விரும்பும்படி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் கேட்டரிங் மாணவ மாணவியர்களுக்கு செறிவூட்டப்பட்ட உணவு மற்றும் சிறுதானிய பொருட்கள் பயன்பாடு குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். மேலும் இப்பயிற்சி கருத்தரங்கில் உணவு செறிவூட்டல் வள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உணவு பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.