ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், ‘பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா’ நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் எஸ்.கே. யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடி. இதில் 53 சதவீதம் பேர் இளைஞர்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். அதனால்தான் நம் நாடு, ‘இளம் இந்தியா’வாகத் திகழ்கிறது. இது நாம் பெருமைப்படுவதற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு உள்ள பொறுப்பையும் உணர்த்துகிறது.

உலகில் இதுதான் முக்கியமானது என்பது இல்லவே இல்லை. அனைத்துமே முக்கியமானதுதான். அனைத்து பணிகளுமே சமமான முக்கியத்துவம் பெற்றதுதான். நமது நாட்டின் முப்படை 1.4 மில்லியன் எண்ணிக்கையைக் கொண்டது. சீனாவை விட படைபலம் மிக்க பாதுகாப்பு படை, நம்முடைய இந்திய முப்படைதான். இது நம்முடைய நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.

16.5 வயது முதல் 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ராணுவத்தில் சேர தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நல்ல ஊதியம், சலுகைகள், சமூக நன்மதிப்பு போன்றவை கிடைக்கும். ஓய்வுக்குப் பிறகு நிறைய சலுகைகளைப் பெற முடியும். வேலைவாய்ப்புகளைப் பெற விரும்புபவர்கள் ராணுவத்திலும் பணியாற்ற ஆர்வம் காட்டலாம்.

மாணவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்றல் முடிவற்றது. மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடாமல் இருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தில் எப்போதுமே ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னர் ஒரு பெண் இருப்பார் என்றால், இவ்விருவரின் வெற்றிக்குப் பின்னர் ஆசிரியர்கள் இருப்பார்கள். அனைவரையும் இணைக்கும் பாலமாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். இந்நேரத்தில் அவர்களை நினைவுக் கூர்ந்து நன்றி செலுத்துவோம் எனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலாண்மைத்துறை இயக்குநர் பாமினி, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் பிரணீஷ், பன்னாட்டு வணிகத் துறைத்தலைவர் பர்வீன் பானு ஆகியோருக்கு முறையே ‘சிறந்த ஆசிரியர் விருது’கள் மற்றும் தலா ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் என ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

பன்னாட்டு வணிகத்துறை, மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு சிறந்த துறைகளுக்கான விருதுகள் மற்றும் ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரிகேடியர் எஸ்.கே. யாதவ் அவர்களின் மனைவி சரிதா யாதவ், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.