கொங்குநாடு கல்லூரியில் பழங்குடிகள் நல மையம் துவக்கம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், கோயம்புத்தூர் மாவட்ட வனவாசி சேவா கேந்திரமும் இணைந்து அன்னை சாரதா இலவசத் தையல் பயிற்சி மையச் சான்றிதல் வழங்குதல் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிப் பழங்குடிகள் ஆய்வு மற்றும் நல மையத் தொடக்க விழா கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் அரிச்சந்திரன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் வாசுகி விழாவிற்குத் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

அவர் பேசுகையில்: பாரதத் திருநாட்டின் குடியரசுத் தலைவராக பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் பொறுப்பேற்றிருப்பது பெருமைக்குரியது. வனவாசி சேவா கேந்திரம் இந்தியாவின் பழங்குடிச் சமூகங்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாக் கொண்டு செயல்பட்டு பழங்குடிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நம் கல்லூரியும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திலும் நலனிலும் அக்கறைகொண்டு கருத்தரங்குகளை நடத்துதல், பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு உதவுதல், பழங்குடியினரால் நடத்தப்பட்டுவரும் பயிற்சி மையங்களுக்கான இலவசக் கணிணிகள், மேசைகள் வழங்குதல், பயிற்சி வகுப்புகளை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இன்று அதில் ஒரு மைல்கல்லாக பழங்குடிகள் ஆய்வு மற்றும் நல மையத்தினை நம் கல்லூரியில் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இம்மையத்தின் சார்பாக சான்றிதழ் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இவற்றின் வாயிலாகப் பழங்குடிகளின் பண்பாடு மற்றும் மரபறிவு முறைமைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள இயலும் என்பதை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அன்னை சாரதா இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பழங்குடிப் பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் லச்சுமணசாமி, கல்விப்புல முதன்மையர் மதன்சங்கர், வனவாசி சேவாகேந்திர மாநிலத் துணைத்தலைவர்  சண்முகம் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து வானவாசி சேவா கேந்திர மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், வானவாசி சேவா கேந்திர அமைப்பு பழங்குடி மக்களின் கல்வி, மருத்துவம், பொருளாதார மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பழங்குடிகள் ஆய்வு மற்றும் நல மையத்தினைத் தொடங்கி வைத்து வனவாசி சேவா கேந்திர மகளிர் பொறுப்பாளர் தயாபரி பழங்குடிமக்களின் இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வியல் முறைகளிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியவற்றைத் தமது உரையில் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வனவாசி சேவா கேந்திர அமைப்பின் பொருளாளர்  ஸ்ரீதர்  நன்றியுரையாற்றினார்.