மெகா கூட்டணி சாத்தியமா?

திர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ள நிலையில், அது சாத்தியமாகுமா?, எந்தெந்த கட்சிகள் இடம்பெறும்? என்ற விவாதம் தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இருப்பினும், அத்தேர்தலுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே கொள்கை அளவில் அமைந்த திமுக கூட்டணியுடன் மோதிய அதிமுக கூட்டணி 39 தொகுதிகளில் ஒன்றில் (தேனி மக்களவைத் தொகுதி) மட்டுமே வெற்றிபெற்றது.
தொடர்ந்து, 2021 பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த தேமுதிக விலகி, டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுகவுடன் இணைந்து போட்டியிட்டது. புதிய தமிழகமும் தனித்து போட்டியிட்டது. இருப்பினும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட அதிமுக அணி 75 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

ஆட்சியை அதிமுக இழந்தாலும், மக்களவைத் தேர்தலில் எடுத்த அதிமுக அணியின் வாக்கு வங்கி 39.61 சதவீதத்தில் இருந்து, 39.72 சதவீதமாக உயர்ந்தது. இதனால், மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு இடையே 17.14 ஆக இருந்த வாக்கு சதவீத வித்தியாசம் 5.66 ஆக குறைந்தது.
திமுக அணி கொள்கை ரீதியாக ஒற்றுமையாகவும், தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என வெற்றிப்பயணத்தில் இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை அப்படியே தக்கவைத்தால், திமுக ஆட்சி மீது எழும் அதிருப்தியை பயன்படுத்தி எப்படியாவது இரட்டை இலக்கத்தில் தமிழகத்தில் தொகுதிகளை அதிமுக அணி மூலம் வென்றெடுக்க முடியும் என பாஜக கணக்குப் போட்டிருந்தது.
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பேசிக்கொண்டே பாஜகவை கடைசிநேரத்தில் கழற்றிவிட்டது அதிமுக. பாமகவும் தனித்தே களம் கண்டது. தனித்தே களம் இறங்கிய அதிமுகவும் படுதோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் தான், இரட்டைத் தலைமை இரண்டு ஒற்றைத் தலைமைகளாக (இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.) இரு அணிகளாக அதிமுக இயங்கி வருகிறது.

இதற்கிடையே பாஜகவும் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றுவதற்கான கட்சிப்பணிகளை முடக்கிவிட்டு தீவிரமாக களமாடி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் களத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, ஹிந்தி எதிர்ப்பு, கோவை கார் வெடிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கருத்துமோதல், போராட்டம் என திமுக, பாஜக இடையே தான் அரசியல் களம் கட்டமைக்கப்படுவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, இரு வாரங்களுக்கு முன்பே ஊடகத்துக்கு பேட்டி அளித்த பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அமைப்புடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும், தனி நபர்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது இபிஎஸ் ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், பிரதமர் மோடி தலையிட்டு அதிமுகவில் இரு அணிகளையும் இணைத்து வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், தான் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும், அதிமுக பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருபோதும் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையும், அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட அதிமுக இன்றி மெகா கூட்டணி எப்படி சாத்தியமாகும் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ஒன்றுபட்ட அதிமுகவுடன் பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக்கொண்டே 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணியை வீழ்த்த முடியவில்லை. இப்போது ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா என தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பலமிக்க சக்திகளாக விளங்கும் இவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு மெகா கூட்டணி எப்படி சாத்தியமாகும், அப்படியே கூட்டணி அமைந்தாலும் அது வெற்றிக்கூட்டணியாக மாறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

பாஜகவை பொறுத்தவரை 2014, 2019 மக்களவைத் தேர்தல் போல இல்லாமல் 2024 இல் பாஜக இடம்பெறும் கூட்டணிக்கு இரட்டை இலக்க இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பது இலக்காக உள்ளது. இபிஎஸ் விதிக்கும் நிபந்தனைகளில் ஒன்றான அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை பாஜக நிச்சயம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், கூட்டணிக்குள் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை அதிமுக மட்டுமே தீர்மானிக்க அனுமதிக்க வாய்ப்பு மிகமிக குறைவு தான்.
மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி களம் காண்பது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் அவசியம். ராகுல் காந்தி விரும்புகிறாரோ இல்லையோ அவரை முன்னிறுத்தி திமுக கூட்டணி நிச்சயம் களம் காணப்போவது உறுதி. அதேபோல, பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தல் களம் காண வேண்டுமெனில் கூட்டணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை பாஜகவுடன் இணைந்து தான் அதிமுக தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

தேர்தல் கூட்டணி விஷயத்தில் பாஜகவின் யோசனையை இ.பி.எஸ். தலைமையிலான அதிமுக ஏற்க பிடிவாதம் பிடித்தால் பாஜக தலைமையில் மாற்று அணி அமைவது தவிர்க்க இயலாத காரியமாகிவிடும். பாஜகவுடன் தான் கூட்டணி என்பதை ஓ.பிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் இப்போதே அறிவித்துவிட்டனர். பிரதமர் வேட்பாளர் இருக்கக்கூடிய அணியுடன் கூட்டணி அமைக்கவே தேமுதிக உள்பட எந்த கட்சியாக இருந்தாலும் ஆசைப்படும். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் கூட்டணி விஷயத்தில் பிடிவாதம் பிடித்தால் தனித்து களம் காணக்கூடிய சூழல் உருவாகலாம்.

இவை எல்லாம் நடந்தாலும், கட்சியின் சின்னமே முடக்கப்பட்டாலும் கூட தங்கள் நிலையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு இ.பி.எஸ். ஆதரவாளர்கள் வந்துவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

காரணம், மக்களவைத் தேர்தலில் வெற்றி என்பது பாஜகவுக்கு தான் கட்டாயமே தவிர அதிமுகவுக்கு அல்ல, சட்டப்பேரவைத் தேர்தல் தான் இ.பி.எஸ் இன் இலக்கு. 90 சதவீத கட்சி நிர்வாகிகள், 62 எம்.எல்.ஏ.க்கள் பலம் தங்களிடம் இருக்கும் நிலையில் சின்னம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கணிசமான வாக்கு வங்கியை இபிஎஸ் தலைமையில் பெற முடியும். அப்படி பெற்றுவிட்டால் 2026 பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க விரும்பும் கட்சிகள் இபிஎஸ் தலைமையை நிச்சயம் ஏற்பார்கள்.

5 ஆண்டு திமுக ஆட்சியில் உருவாகும் அதிருப்தி வாக்குகளையும் அறுவடை செய்தால் மீண்டும் தலைமையில் ஆட்சியை பிடித்துவிடலாம் என இபிஎஸ் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் உறுதியாக இருப்பதாகவே அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.
கூட்டணி, தேர்தல் விஷயத்தில் பாஜகவின் இலக்கு வேறு, இபிஎஸ் தலைமையிலான அதிமுக இலக்கு வேறு. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி சாத்தியமா என்பதை காலம் முடிவு செய்யும்.