என்.ஜி.பி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

“அனைத்து தொழிலிலும் இந்தியர்களே முன்னிலை வகிக்கின்றனர்!”

– நல்ல.ஜி. பழனிசாமி பேச்சு 

அனைத்து தொழிலிலும் இந்தியர்களே முன்னிலை வகித்து சிறந்து விளங்குகின்றனர் என டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி. பழனிசாமி கூறினார்.

டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

கோவை மெடிக்கல் சென்டர் ரிசர்ச் & எசுகேஷனல் டிரஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரன் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

கல்லூரியின் முதல்வர் பிரபா ஆண்டு அறிக்கையை வாசித்தார். அதில் கல்லூரியின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கி கூறினார். மேலும், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்க்காக கல்லூரி முன்னெடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் கல்லூரியின் உட்கட்டமைப்பு குறித்தும் பெருமைபடக் கூறினார். மேலும் கல்வியிலும், விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் புரிந்த சாதனைகளை பட்டியலிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டெக் மகேந்திரா (குளோபல் ஹெட் – சேல்ஸ் எனேபிள்மென்ட்) கிருஷ்ணகோபால் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி, கே.எம்.சி.ஆர்.இ.டி – இன் அறங்காவலர் அருண் பழனிசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எந்த நிலையிலும் பெற்றோரை மறவாதீர்கள்!

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி நிகழ்வில் பேசுகையில்: பட்டம் பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

இந்தக் கல்வி நிறுவனத்தில் ஒழுக்கத்துடன் கல்வி கற்று பட்டப் படிப்பு முடித்து மாணவர்களாகிய நீங்கள் இங்கிருந்து வெளியில் செல்வது மன நிறைவாகவும், மகிழ்வாகவும் உள்ளது.

இந்தியா மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறி செல்லும் நாடாக திகழ்கிறது. அனைத்து தொழிலிலும் இந்தியர்களே முன்னிலை வகித்து சிறந்து விளங்குகின்றனர்.

பட்டம் பெற்று வெளியேறும் உங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உண்டு. ஒரு தொழிலுக்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என அறியுரை வழங்கினார்.

அனைத்து நேரங்களிலும் நமக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது தாய், தந்தையர் தான். உங்களை சிரத்துடன் படிக்க வைத்து உங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் அவர்களே. அவர்களை வாழ்வின் எந்த நிலையிலும் மறக்காதீர்கள் என அறியுறுத்தினார்.

மேலும், மாணவ, மாணவியர்களின் வாழ்வு சிறந்து விளங்க தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.

வேலையில் அர்ப்பணிப்புடன் இருங்கள்!

சிறப்பு விருந்தினர் கிருஷ்ணகோபால் தனது பட்டமளிப்பு உரையில் கூறியதாவது: கல்லூரியில் இருந்து கார்ப்ரேட் உலகிற்கு அடுத்து நீங்கள் செல்லப் போகிறீர்கள். அது உங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்றார். முதலில் நாம் சிறந்த மனிதர்களாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

கல்லூரியில் நாம் கட்டணம் செலுத்தி படிப்போம். ஆனால் கார்ப்ரேட்டில் நமது வேலைக்கு ஊதியம் கிடைக்கும். படிப்பு என்பது நம் சொந்த விருப்பம். எந்த துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். அங்கு கற்றல் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் பணி என்பது அப்படி இருக்காது. அது ஒரு நீண்ட கால செயலாக இருக்கும். அங்கு நம்மிடம் எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி இருக்கும் என எடுத்துரைத்தார்.

பணியில் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகள் குறித்து அவர் தெரிவித்ததாவது: ஒரு வேலையில் நாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். மேலும் கொடுக்கப்பட்ட பணியை தட்டிக் கழிக்க காரணம் கூறக் கூடாது. நமது வேலைக்கான அனைத்து பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதில் ஏற்படும் குறைகளுக்கு பிறரை காரணம் காட்ட கூடாது.

ஒழுக்க நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிய அவர், நேரம் தவறாமை அவசியமான ஒன்று எனவும், நன்றி உணர்வுடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

ஒரு வேலையில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது முக்கியமானது. மேலும் ஒரு நிறுவனத்தில் சிக்கனத்துடன் இருப்பது ஊழியர்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றார்.

ஒரு செயலில் விடாமுயற்சி இருப்பது மிக மிக அவசியம். அந்த திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்.

பணிபுரியும் நிறுவனத்திற்கு உண்மையாகவும், நேர்மை தவறாமலும் இருக்க வேண்டும். அதோடு நிறுவனத்தின் மதிப்பை நிலைநிறுத்த வேண்டும்.

மேலும் நமது அணுகுமுறை முக்கியமான ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், சிறந்த அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்றும், அதில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்தார்.

அனைத்திற்கும் நன்றி உடையவர்களாக இருங்கள். சிறு சிறு செயல்களுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறுங்கள் எனக் கூறி தனது உரையை முடித்தார்.