வேளாண் பணிகளை எளிதாக்கும் ‘அக்ரிஈஸி’ இயந்திரம் கோவையில் அறிமுகம்

வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் முழுவதும் பேட்டரியால் இயங்கக் கூடிய ‘அக்ரிஈஸி’ எனும் விவசாய இயந்திரம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிராக்டர் அட்டாச்மென்ட்ஸ் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாக திகழ்வதும் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களில் (Earth Moving Vehicles) மூன்றாவது பெரிய நிறுவனமாக கோவையில் உள்ள புல் மெஷின்ஸ் நிறுவனம் திகழ்கிறது. விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தும் நோக்கத்துடன் புல் எலக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக பல வகை விவசாயப் பணிகளை செயல்படுத்தும் வகையில் பேட்டரியில் இயங்கும் ‘அக்ரிஈஸி’ இயந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதற்கான அறிமுக விழா கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள க்ரீன் கிளப் வளாகத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுவின் துணை இயக்குனர் ஜெனரல் ஷ்யாம் நாராயண் ஜா, மத்திய வேளாண்மை பொறியியல் இன்ஸ்ட்டியூட்டின் இயக்குனர் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டு புதிய வேளாண் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பதிவாளர் தமிழ் வேந்தன், வேளாண்மை பொறியியல் கல்லூரி டீன் ரவிராஜ் மற்றும் தலைமை பேராசிரியர் சுரேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘அக்ரிஈஸி’ செய்யும் பணிகள்

‘அக்ரிஈஸி’ இயந்திரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய லித்தியம் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இந்த இயந்திரம் களை எடுப்பது மட்டுமின்றி சில மாற்று உபகரணங்களை உபயோகப்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிக்க, பளு தூக்க மற்றும் பல விவசாய பணிகளையும் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ற மாற்று உபகரணங்களை நான்கு நிமிடத்தில் பொருத்தி அதற்கான பணிகளை செய்யும் வண்ணம் இந்த ‘அக்ரிஈஸி’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘அக்ரிஈஸி’ களை எடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்யமுடியும். இந்த இயந்திரத்தை மண்ணின் தன்மையை பொருத்து 5 மாறுபட்ட வேகங்களில் இயக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 4.5 மணி நேரம் தொடர்ந்து இயக்கமுடியும். இதில் இருக்கும் தெளிப்பான் (Sprayer) 33 லிட்டர் கொள்ளளவு கொண்டது. பளுதூக்கும் இயந்திரம் மூலம் சுமார் 80 கிலோ வரை தூக்க வல்லது. இதில் மொபைல் சார்ஜிங் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.