கவனச்சிதறல் இல்லாமல் லட்சியங்களை நிறைவேற்றுங்கள்!

– கற்பகம் கல்லூரியில் பேச்சாளர் மோகனசுந்தரம் பேச்சு

மாணவர்கள் நல்லவற்றைக் கேட்க வேண்டும் என்றும், கவனச்சிதறல்கள் இல்லாமல் தன் இலட்சியங்களை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பேசினார்.

இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதன்மையர் அருள்கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் அறிக்கை வாசித்தார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில்: இன்றைய மாணவர்கள் கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கருத வேண்டும் என்று கூறினார்.

மேலும், இந்திய மாணவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திரவியல் போன்ற பல்வேறு துறைகளில் நம் நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாகக் கூறினார். மாணவர்கள் நல்லவற்றைக் கேட்க வேண்டும். கவனச்சிதறல்கள் இல்லாமல் தன் இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் மற்றும் தன்னை பெற்றெடுத்த பெற்றோர்களை இறுதிவரை பேணிகாக்க வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் துணைமுதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.