இளம் தலைமுறையை பாதிக்கும் ‘ஆபீஸ் சிண்ட்ரோம்’!

பல இளம் தலைமுறையினருக்கு 8 மணி நேர உழைப்பும், 8 மணிநேர ஓய்வும் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒரு விசயமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்து இருந்தால் உடல் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். இதன் தொடக்கமாக ஆபீஸ் சிண்ட்ரோம் (Office Syndrome) என்ற ஒரு புதிய பிரச்சினையை இளம் தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.

8 மணிநேரத்திற்கு மேல் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியை பார்த்துக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் உடல் அசௌகரியங்களை (கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் முதுகு தசைகளின் வீக்கம்) ‘ஆபீஸ் சிண்ட்ரோம்’ என்கிறோம்.

“15 வருடத்திற்கு முன்பெல்லாம் கழுத்து, முதுகு எலும்பு தேய்மானம் ஆகியவை 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படும். ஆனால் கடந்த 10, 12 வருடங்களாக 21 வயதில் இருந்து 35 வயதுடைய பலருக்கு கழுத்து, முதுகு எலும்பு தேய்மானம் ஏற்படுவதை காண முடிகிறது” என பிபிசி தமிழ் நேர்காணலில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அஸ்வின் விஜய் கூறியுள்ளார்.

‘ஆபீஸ் சிண்ட்ரோம்’ பற்றி அவர் தெரிவிக்கையில்: இது ஒரு நோயல்ல. அவை ஒரு தொகுப்பான அறிகுறிகள். தற்போது பலர் 8 லிருந்து 14 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே பணியில் ஈடுபடுகிறார்கள். 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்பவர்கள் பொதுவாக சந்திக்க கூடிய பிரச்சினைதான் ஆபீஸ் சிண்ட்ரோம். அமரும் தோரணை சரி இல்லையென்றாலும், ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்து கணினி திரையை பார்ப்பது ஆகிய காரணங்களினால் இவை ஏற்படுகிறது.

பொதுவாக தலைவலி, முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, கண்ணை சுற்றிலும் வலி, சோர்வாக இருப்பது போன்ற உணர்வு, நன்றாக உறங்கி இருந்தாலும் எழுந்ததும் புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பது ஆகியவை ஆபீஸ் சிண்ட்ரோம்க்கான அறிகுறி ஆகும். இது இன்னும் சிக்கலான நிலைக்கு செல்லும் போது கழுத்தில் இருந்து வலி கைக்கு பரவும், கை மரத்து போவது, தலை சுற்றல் ஏற்படும் என தெரிவித்தார்.

பொருளதாரம், குடும்ப சூழல் காரணமாக ஒருவரால் பணியை விடமுடியாத நிலை உள்ளது எனக் கூறிய அவர், 8 லிருந்து 12 மணிநேரம் அமர்ந்து வேலை செய்யும் சூழலில் சில செயல்களை வழக்கமாக கடைபிடித்தால் 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை ஆபீஸ் சிண்ட்ரோம்க்கான அறிகுறிகளையும், பாதிப்புகளையும் நம்மால் தவிர்க்க முடியும் என்றார்.

சில நேரம் பணியில் அதிக ஈடுபாடு கொண்டு கணினி திரையில் மூழ்கி, அவர்களை அறியாமலேயே நாற்காலியின் நுனியில் அமருவார்கள். இது அவர்களின் முதுகெலும்பின் வளைவை மாற்றி விடுகிறது. இது முதுகு மற்றும் கழுத்துக்கு நல்லதல்ல. எனவே, நாற்காலியில் அமரும்போது நுனியில் அமரக் கூடாது. அதோடு, உட்காரும் போது நாற்காலியின் பின்புறம் ஒட்டியவாறு உட்கார வேண்டும். முடிந்தளவு நேராக உட்கார முயற்சி செய்ய வேண்டும், குனிந்து உட்காரக் கூடாது.

உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுடன் (அதிக பாரம் தூக்குவது போன்ற வேலைகள்) ஒப்பிடும் போது அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் உடல் ஓய்வில் தானே உள்ளது. பின்பு ஏன் அவர்கள் இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்ற நெறியாளரின் கேள்விக்கு,

உடல் என்பது ஓய்வெடுப்பதற்க்கான ஒரு விசயம் கிடையாது. உடலை அசைத்து வேலை செய்வது தான் நல்லது. எவ்வளவு அசைத்து வேலை செய்கின்றோமோ அவ்வளவு நல்லது. இதனால் முதுகெலும்பு நன்றாக இருக்கும்.

கழுத்தில் இருந்து முதுகுக்கு கீழ்வரை செல்லும் ஒரு பகுதி தான் முதுகெலும்பு நெடுவரிசை (spinal column). இதனை சுற்றி எலும்புகள், ஜவ்வுகள், தசைகள் உள்ளன. எவ்வளவு அசைத்து வேலை செய்கிறோமோ அந்த அளவிற்கு அவ்விடம் ஆரோக்கியமாக இருக்கும். வேலை கொடுக்காமல் இருந்தால் தேய்மானம் ஏற்பட்டுவிடும் எனக் கூறினார்.

“சமீபத்தில் 28 வயதுடைய இளைஞர் தீவிர கைவலி, விரல்நுனிகள் மரத்துபோய் என்னிடம் வந்திருந்தார். விரல்நுனி மரத்து போய் அவரால் பேனா கூட பிடிக்க முடியவில்லை. அவர் கடந்த 5 வருடமாக வீட்டில் இருந்தே கணினியில் 14 மணிநேரம் வேலை பார்த்து வருகிறார் (work from home). 5 வருடமாக அவர் சரியாக தூங்கவும், சாப்பிடவும் இல்லை. மேலும், கழுத்துவலி, தோள்பட்டை வலியும் இருந்தது.

எக்ஸ்ரேயில் அவரது கழுத்து சம்பந்தப்பட்ட எலும்புகள் 45 லிருந்து 47 வயதுடைய தோற்றத்தை கொண்டிருந்தது. இது முழுவதுமாக வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்ப்பட்டுள்ளது.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்ததில் முதுகு தண்டு பக்கத்தில் சில எலும்புகள் வளர்ந்து (தேய்மானம் ஏற்பட்டால் இவை வளரும்) தண்டுவடத்தை குத்திக் கொண்டிருந்தது. அவரை ஒரு மாதம் வேலையில் இருந்து விடுப்பு எடுக்கச் சொல்லி அவருக்கான சில நெறிமுறைகளை வகுத்துள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் அவர் சரியாகி விடுவார்” என தன்னிடம் சமீபத்தில் வந்திருந்த ஒரு நோயாளி பற்றி பகிர்ந்துக் கொண்டார் மருத்துவர் அஸ்வின் விஜய்.

இது ஒரு உதாரணம் தான் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு மாதத்தில் இதுபோன்ற பிரச்சினை உள்ள 55 நோயாளிகளை தங்கள் கிளினிக்கில் பார்ப்பதாகவும், அவர்கள் 25 வயதில் இருந்து 45 வயது உடையவர்களாகவும் இருப்பதாக பதிவிட்டார்.

ஆபீஸ் சிண்ட்ரோமை கவனிக்காமல் விட்டோமானால் கழுத்து எலும்பு தேய்மானம், கீழ் முதுகு தேய்மானம், கழுத்தில் டிஸ்க் பிரச்சினை, பின் முதுகு பிரச்சினை ஆகியவை ஏற்படும். மேலும் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு உடலை அசைக்காமல் கணினியை பார்ப்பது மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும். பத்தில் ஆறு பேர் இந்த ஆபீஸ் சிண்ட்ரோமால் மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கிறார்.

துரித உணவு கலாச்சாரமாக மாறிவிட்ட சூழலில், சிலர் மன அழுத்தத்தால் உணவில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர். கண்ணிற்கு ஆரோக்கியம் தரும் கேரட், வைட்டமின் சி அதிகம் உள்ள கொய்யப் பழம், சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகளை வாரத்தில் ஒரு நாளாவது சாப்பிட வேண்டும் எனவும் அறியுறுத்தினார்.

 

எழுத்து: சு.ரம்யா