கோவையை பசுமை தொழில் நகரமாக மாற்ற முயற்சி

கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் தைவான் தொழில்நுட்பத்தின் மூலம் பசுமை தொழில் வளர்ச்சியை மேற்கொள்ள தேசிய உற்பத்தி குழு மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை இடையே   வர்த்தக சபை அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தைவான் பசுமை தொழில்புரட்சி, மாசு கட்டுப்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு, மின்சார வாகனங்கள் பயன்பாடு, சாப்வேர் கிளவுட் தொழில்நுட்பம், பருவகால மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் கோவை மாவட்டத்திற்கு கிடைக்க இருக்கிறது.

பசுமையான தொழில் வளர்ச்சியை எப்படி உருவாக்குவது என்பது குறித்து 8 பேர் கொண்ட உயர்மட்ட தொழில்துறை குழு தைவானில் இருந்து கோவை வந்துள்ளனர். இவர்கள் இந்தப் பகுதியில் தொழில் துவங்கவிருக்கும் தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவர். இதன்மூலம் கோவை மாவட்டமும், அதை சுற்றி உள்ள பகுதிகளும் சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தொழிலை மேற்கொள்ள முடியும்.

இந்திய தொழில் வர்த்தக சபை, தேசிய உற்பத்தி குழு மற்றும் ஒன்றிய அரசின் கூட்டு முயற்சியால் கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பசுமை தொழிலாக்க அபிவிருத்தி செய்வது எப்படி என்ற ஆலோசனை இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தேசிய உற்பத்திக் குழு தலைவர் சந்தீப் நயாக் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை, இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஶ்ரீராமுலு, கோவையை பற்றியும், கோவையின் சிறப்புகள் பற்றியும் பேசினார்.

இதில் தைவான் தொழில் அதிபர்களும், கோவையை சேர்ந்த பல்வேறு தொழில் அதிபர்களும் கலந்துகொண்டனர்.