கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி ‘சாம்பியன்’

கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர், மாணவியர் அணிகள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 31 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்து 64 மாணவர் அணிகளும், 55 மாணவி  அணிகளும் பங்கேற்று விளையாடின.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் மாணவர் அணி காலிறுதிப் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லூரி அணியை 3-0 செட் கணக்கில் வீழ்த்தி ‘லீக்’ சுற்றுக்குத் தகுதி பெற்றது. முதல் சுற்றில் கோபி கலை கல்லூரியை 3-0 என்ற செட் கணக்கிலும், இரண்டாவது சுற்றில் கொங்கு கலை கல்லூரி அணியை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. இறுதிச் சுற்றில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி அணியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் அணி, சாம்பியன் பட்டத்தைத் வென்றது.

அதேபோல் மாணவியர் பிரிவு காலிறுதி சுற்றில் குமரகுரு பன்முகக் கல்லூரி அணியை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி மாணவியர் அணி, முதலாவது லீக் போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அணியை 2-0 என்ற செட் கணக்கிலும், இரண்டாவது சுற்றில் பாரதியார் பல்கலைக்கழக அணியை 2-0 என்ற செட் கணக்கிலும், இறுதிச் சுற்றில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரி அணியை 2-0 செட் கணக்கிலும் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மாணவர் மற்றும் மாணவியர் அணியினரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் வடிவேலு ஆகியோர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.