குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

ஆண்டிற்கு 20 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிப்பு!

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி (அக்டோபர்) கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் புற்றுநோய் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர் ராஜ்குமார் கூறுகையில்: இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இதனால் வரும் இறப்புகளை தவிர்ப்பதற்கு ஆரம்பத்திலேயே இப் புற்றுநோயை கண்டறிய வேண்டும். அப்படி கண்டறியும் பொழுது அதனை குணப்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள், இதற்கான பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை மெமோகிராம் என்ற மார்பக பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும். இதனுடன் பெண்கள் தங்கள் மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.

மெமோகிராம் பரிசோதனையில் மார்பகத்தில் கட்டி தெரிவதற்கு முன்பே முதல் நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து விடலாம். அப்பொழுது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எங்கள் மருத்துவமனையிலும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருவதோடு இலவசமாக பரிசோதனையும் செய்கிறோம் எனக் கூறினார்.