இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மரம் நடும் விழா

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தேசிய சேவை திட்டம் சார்பாக கல்லூரி வளாகத்தில் மரம் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாரிமுத்து யோகநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் ட்ரீ மேன் மாரிமுத்து யோகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

தமிழ்நாட்டின் ட்ரீமேன் யோகநோதன் சுற்றுச்சூழல் ஆர்வலர், பேருந்து நடத்துனர், கடந்த முப்பதாண்டுகளில் தனது சொந்த செலவில் மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அவர் தனது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்கிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சென்றுள்ளார். சமுதாய நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் சமீபத்தில் அவருக்கு காலநிலை வாரியர் விருது வழங்கப்பட்டது.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கல்லூரி வளாகம் முழுவதும் 5000 சிறிய மற்றும் பெரிய வகை மரங்கள் அமைந்துள்ளது. இவற்றை சிறப்பு விருந்தினர் பார்வையிட்டு, பசுமையான சூழலை பராமரித்ததற்காக என்எஸ்எஸ் அதிகாரியை பாராட்டினார்.

மேலும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவர்களிடையே சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சிறந்த திட்ட அலுவலர் விருதைப் பெற்ற என்.எஸ்.எஸ் அதிகாரி பிரசன்ன வெங்கடேசன் மற்றும் சிறந்த மாணவர் தன்னார்வ விருது வாங்கிய கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவி ஹேமலதா அவர்களை பாராட்டினார்.

கல்லூரி முதல்வர் ஜெயா தனது சிறப்புரையில் மரங்கள் வளர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள், சுற்று சூழல் பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

சமீபத்தில் காலநிலை வாரியர் விருதை வென்ற தமிழ்நாட்டின் ட்ரீ மேன் யோகநோதன்  அவர்களை இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர்  பிரியா சதிஷ்பிரபு, பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.