உலகிலேயே முதல் முறையாக 22 டிபி ஹார்டு டிரைவ் இந்தியாவில் அறிமுகம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் புதிய ‘அல்ட்ராஸ்டார் டிசி எச்சி570 22டிபி சிஎம்ஆர் ஹார்டு டிரைவ்’களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதன் தனித்துவமான ஆப்டிநந்த், பிஎம்ஆர், ஆர்மோர் கேச் மற்றும் ஹீலியோசீல் போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம், இந்நிறுவனம் அதன் தொழில்நுட்பம் பிரிவில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும்.

‘அல்ட்ராஸ்டார் டிசி எச்சி570’ ஹார்டு டிரைவை இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. சமீபத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்து முடிந்துள்ளது. இதன் காரணமாக விரைவில் 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதற்கான டேட்டா மற்றும் கிளவுட் சேமிப்பு ஆகியவற்றுக்கான பயன்பாடு என்பது அதிக அளவில் இருக்கும். இந்த ஹார்டு டிரைவ்கள் இது போன்ற பணிகளுக்கு சிறந்த ஒன்றாக இருப்பதோடு, நிறுவனங்களின் மொத்த உரிமைச் செலவையும் குறைக்கும்.

இந்த புதிய அறிமுகம் குறித்து வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்தின் இந்தியாவிற்கான விற்பனை பிரிவு மூத்த இயக்குனர் காலித் வானி கூறுகையில், உலகின் முதல் 22TB CMR ஹார்டு டிரைவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி வருவதோடு, பல ஆண்டுகளாக டேட்டா மையங்கள் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்நிறுவனத்தின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கான மார்க்கெட்டிங் மூத்த இயக்குனர்
ஜெகநாதன் செல்லையா கூறுகையில், நாம் இன்று ஜெட்டாபைட் சகாப்தத்தில் வாழ்கிறோம் மற்றும் பெரிய அளவிலான டேட்டாக்களையும் உருவாக்கி வருகிறோம். நாங்கள் அறிமுகம் செய்துள்ள எங்களின் புதிய 22டிபி டிரைவ்கள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான டேட்டாவை திறம்படச் சேமிக்கவும் உதவும், அதே நேரத்தில் அவர்களுக்கான செலவையும் வெகுவாக குறைக்கும் என்று தெரிவித்தார்.

22 டிபி அல்ட்ராஸ்டார் டிசி எச்சி570 ஹார்டு டிரைவ் தற்போது ராஷி பெரிபரல்ஸ் மற்றும் டெக் டேட்டா இந்தியா ஆகிய நிறுவனங்களில் கிடைக்கிறது.