அளவு கடந்த பாசத்தால் திருமண பத்திரிக்கையில் வளர்ப்பு நாயின் பெயர் போட்ட குடும்பம்!

கோவை பன்னிமடை பகுதியில் வசிக்கும் மோகன் – ஷோபா தம்பதியினர் கொரோனா காலகட்டத்தில் சாலை மற்றும் தெருவோரம் சுற்றிவரும் 100 க்கு மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்க துவங்கியுள்ளனர்.

நாளடைவில் அந்த நாய்கள் இவர்கள் மீது காட்டும் அன்பை பார்த்து, அதன் மீது அதீத பாசம் கொண்டு தினமும் அந்த நாய்களுக்கு மோகன் – ஷோபா தம்பதியினரும் மற்றும் அவரது ஒரே மகன் மணிகண்டன் ஆகியோர் பணிக்கு செல்லும் போது தினமும் தெரு நாய்களுக்கு உணவு வழங்க துவங்கியுள்ளனர்.

ஒரு நாள் பணிக்கு செல்லும் நேரத்தில், சாலை விபத்தில் அடிப்பட்டு கிடந்த குட்டி நாயைக் தூக்கி வந்து வளர்த்துள்ளனர். அந்த நாய், ஒரு நாள் மூன்று குட்டிகளை ஈன்று இறந்து விடவே, அதன் மீது உள்ள பாசத்தால் அந்த மூன்று குட்டிகளுக்கு buffy, tingu, Lucy என பெயர் வைத்து தனது பெற்ற குழந்தைகள் போல வளர்க்க துவங்கி, தனது மகனுக்கு ஒரு சகோதர, சகோதரிகள் இருந்தால் எப்படி வளர்ப்பார்களோ அப்படி வளர்த்து வருகின்றனர்.

இறந்த நாயின் வலி தெரியாமல் வளர்ப்பதாக கூறும் மோகன், அதன் மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடகவே எனது மகனின் திருமண பத்திரிக்கையில் அந்த மூன்று நாய்களின் பெயரை குறிப்பிட்டதாக கூறுகின்றார்.

அந்த தம்பதியினர் இந்த திருமண பத்திரிக்கையில் நாயின் பெயரைக் குறிப்பிட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வழங்கும் போது, “யார் இவர்கள் என்று, உங்களுக்கு ஒரே மகன் தான் இருக்கிறார்கள்” என்று கேட்டதாக தெரிவிக்கின்றனர். யாரையும் பற்றி நாங்கள் கவலைபடவில்லை, இவர்களும் என் குழந்தைகள் தான். திருமண மேடையில் இந்த நாய்களுடன் குடும்பத்தோடு புகைபடம் எடுக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் மணமகன் மணிகண்டன் கூறுகையில், எனக்கு தங்கை, தம்பிகள் இருந்தால் எப்படி பழகுவேனோ அதேபோல் தான் அதனுடன் ஒரே அறையில் தூங்குவது, சாப்பிடுவதுமாக இருப்பதாகவும் பத்திரிக்கையில் கூட நாய்களின் பெயர் போட்டதற்கு ஆரம்பத்தில் மணமகள் வீட்டிலிருந்து கேட்டதாகவும் பின்னர் அவர்களும் எங்களின் பாசத்தைக் புரிந்து கொண்டாதகவும் அவர் தெரிவித்தார்.

இல்ல திருமண பத்திரிக்கையில் தான் வளர்க்கும் மூன்று தெருநாய்களின் பெயர்களை போட்டு தனது பாசத்தைக் வெளிபடுத்தியுள்ள இந்த குடும்பத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.