டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணமா?

கடந்த சில நாட்களாக இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த தகவல் மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இது கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய நிதி அமைச்சகம், களத்தில் இறங்கி அப்படி எல்லாம் கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களும் தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கி உள்ளனர்.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, அதற்கு கட்டணம் என்றால் என்ன? என்று பார்த்தால் அதற்கு பின்னால் மிகப் பெரிய ஒரு வரலாறு இருக்கிறது. முன்பெல்லாம் ஒருவர் இன்னொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் சாதாரண மனிதர்கள் மணியார்டர் அனுப்புவார்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள் செக், டிமாண்ட் டிராஃப்ட் என்று பல வழிகளும் உண்டு. எவ்வளவு வழிமுறைகள் இருந்தாலும் பணம் அவ்வளவு விரைவில் சென்று அடைந்து விடாது. பல தடைகளும் இடையூறுகளும் குளறுபடிகளும் இருந்துதான் வந்தன.

இப்படி ஒரு நிலையில் தான் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற முறை 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக அப்போதிருந்த ரகுராம் ராஜன் இதனை அறிமுகப்படுத்தினார். யுபிஐ முறை எனப்படும் இந்த முறையில் பணம் அனுப்புபவர்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும். அந்த அளவுக்கு இந்த முறை எளிமையானது. உலக அளவில் இன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி இந்தியா இந்த யுபிஐ பயன்பாட்டில் முன்னணி நாடாக திகழ்கிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் கட்டணம் இதில் மக்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் சாதனையாகும்.

அதாவது நாம் போன் மூலமாக, ஜி பே, போன் பே, பீம் போன்ற ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் முறை தான் இந்த யூபிஐ முறையாகும். இன்றைய சூழலில் இது இல்லை என்றால் இந்தியாவில் பல லட்சம் பண பரிவர்த்தனைகள் நின்று விடும் என்கிற அளவுக்கு இந்த முறை இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது.

பெட்டிக்கடை, டீக்கடை தொடங்கி, இளநீர் விற்பவர்கள், காய்கறி கடை, ஓட்டல், சினிமா தியேட்டர், மளிகைக்கடை மற்றும் தனியார் சில்லரை வணிகம் என்று எல்லா இடங்களிலும் இந்த முறை அதாவது ஜி பே போன்றவை சக்கை போடு போட்டு வருகின்றன. இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது என்பதால் மாணவர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள், சிறு வணிகர்கள் என்று பலரும் இதை பயன்படுத்துகிறார்கள். இது பல்கிப் பெருகி வளர்ந்து வரும் சூழலில் தான் இதற்கு கட்டணம் என்ற பேச்சு இப்பொழுது கிளம்பியுள்ளது.

பொதுவாக எந்த ஒரு பொருள் அல்லது சேவையை முதலில் அறிமுகம் செய்யும் பொழுது இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ அறிமுகப்படுத்துவார்கள். பிறகு அதற்கு கட்டணம் விதிப்பது வணிகத்தில் வாடிக்கையான ஒன்று. அது போல இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகமாகி, இன்று பட்டி தொட்டி எல்லாம் நடைபெறும் நிலையில் இந்த கட்டண விதிப்பு என்ற செய்தி வந்து, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உடனடியாக நிதி அமைச்சகம் அறிவித்தது நல்லது என்றாலும் எதிர்காலத்தில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம் வரக்கூடும். இந்த சேவை வழங்கும் நிறுவனம் அந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தலாம். ஆனால் இந்தியா போன்ற 100 கோடி பேருக்கு மேல் உள்ள நாட்டில் அதுவும் பெரும்பாலான மக்கள் சராசரி வருமானத்திற்கு கீழ் பெறும் நிலையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.

வரி விதிப்புக்கு அல்லது வருமானத்துக்கு என்று வேறு பல வழிகள் உள்ளன. இந்த யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை முறை என்பதை ஒரு மக்கள் நல்வாழ்வு திட்டமாகவே பார்க்கவேண்டும். கூடவே தனிநபர், சில்லரை வணிகம் ஆகியோரின் பொருளாதார வளர்ச்சிக்காக உதவுவதால் உருவாகும் மேம்பாட்டு நிலையை கவனிக்க வேண்டும். எனவே இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒரு ஆதாயம் தரும் ஆதாரமாக பார்க்காமல் மக்கள் நலத் திட்டமாக கருதி, இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகும்.