கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை “ஆஸாதிகா அம்ருத் மஹோட்சவ்” கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்றுகள் நடுத்தல், கலை நிகழ்ச்சிகள், கவிதை போட்டி, பாடல், நடனம், பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 76வது சுதந்திர தின விழா நடைபெற்றது. கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மகாகவி பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், கல்லூரி முதல்வர் சுதந்திரதின உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் நிரஞ்சன் பாரதி சிறப்புரையாற்றினார். அவரது உரையில் பண்டைய காலத்திலேயே நாம் உலகின் சிறந்த பொருளாதாரத்தை கொண்டிருந்தோம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களை விட நாம் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மையை கொண்டிருக்கவில்லை மாறாக நாம் அவர்களை விட அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற உயர்வான எண்ணத்தை கொண்டிருந்தனர், அந்த மனப்பான்மை நம் இளைஞர்களுக்கும் வர வேண்டும் என்றார். மகாகவி பாரதியார் சிறந்த நாட்டுப் பற்றை கொண்டிருந்தார். ராணுவத்தில் இருந்தால்தான் நாட்டுப்பற்று உள்ளவர்கள் என்று பொருள் இல்லை நாட்டுப்பற்றை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம், பாரதியாரின் பேனா தான் துப்பாக்கி, அவரது பாடல்கள்தான் தோட்டாக்கள் என்று செயல்பட்டார் பாரதியார். அவர் தன்னை பாரதமாதாவின் ஒரு சேவகராக நினைத்து செயல்பட்டார். தன்னை ஒரு ராணுவ வீரராகதான் நினைத்தார் அதுபோல இந்த நாட்டின் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தன்னை ஒரு ராணுவ வீரராக, வீராங்கனையாக நினைத்துக்கொள்ள வேண்டும், இந்த மனப்பான்மை நாட்டு மக்கள் அனைவருக்கும் வந்தால் நம் நாட்டை யாரும் தொட முடியாது என்று பேசினார்.

இதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.