எந்த செயலிலும் 100 % உழைப்பைப் பயன்படுத்துங்கள்!

– லெப்டினன்ட் ஜெனரல் அருண்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றார். பாரதியார் பல்கலைக்கழக அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து தக்சின் பாரத் ஏரியா கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அருண் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘லீடர்ஷிப் அண்டு ஓனர்ஷிப்’என்ற தலைப்பில் பேசியதாவது: தலைமைப் பண்பு என்பது வெற்றியாளர்களின் சிறந்த பண்புகளில் ஒன்று. நமக்கான பாதையில் பயணித்தல், மற்றவர்களை வழி நடத்துதல், நேர்மையாக இருந்தல், நுண்ணறிவு, புதிய பாதையை உருவாக்குதல், இலக்கை தீர்மானித்தல், மற்றவர்களை மரியாதையாக நடத்துதல், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும்.

பெரிய வெற்றியை அடைவதற்கு மனிதவளம் மிகவும் அவசியம். நாட்டைப் பாதுகாக்கும் இராணுவத்தில் ஏராளமான ஆயுதங்களும், தளவாடங்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பயன்படுத்த ராணுவ வீரர்கள் அவசியம். கல்லூரி இருக்கிறது என்றால், அது நல்ல முறையில் செயல்பட மாணவர்கள் அவசியம்.

கற்பித்தலில், பாடம் குறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் கற்றல் வெற்றி பெறும். ஆசிரியர்கள் செயல்முறை கல்வியை மாணவர்களுக்கு கற்பித்தால், அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். என்னால் எதுவும் முடியாது என்று நினைக்கவே கூடாது. ஒரு கை, கால் இல்லாதவர்கள் கூட, சாதனை புரிந்து கொண்டிருக்கின்றனர். எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் 100 சதவீதம் உழைப்பைப் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய மாணவர்கள் இணையதளம் மூலம் தேவையான தகவல்களைத் திரட்டிக்கொள்ள முடியும். ஆனால் ஆசிரியர்களின் அனுபவத்தை அவர்களால் பெறமுடியாது. ஆசிரியர்கள் மூலமாக பெறும் கற்றலே சிறந்த அறிவை உருவாக்கும். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அவர்கள் மாணவர்களாக இருந்தபோது படித்ததை, இப்போது படிக்கும் மாணவர்களிடம் பொறுத்தி பார்க்கக்கூடாது.

மாணவர்கள் என்ன படிக்கிறார்களோ அதை முழுமையாகக் கற்றுத் தெளிய வேண்டும். கல்லூரிகளைப் பொறுத்தவரை ரேங்க் பெறுவது முக்கியமல்ல. மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவது தான் முக்கியம் என்று கூறினார்.

பின்னர், சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு மெடல் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.