வேளாண் பல்கலையில் புதிய இயந்திர நிலையம்

துணைவேந்தர் துவக்கி வைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பிரிவில் தானியங்கி முட்டை கோழி தீவனம் இடும் இயந்திரம் மற்றும் மத்திய பண்ணைப் பிரிவு, உழவியல் துறையில் நெல் விதை சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

நெல் விதை சுத்திகரிப்பு இயந்திரம் மணிக்கு 5 ஆயிரம் கிலோ நெல் விதையினை சுத்திகரிக்கும் திறனுடையது. இதன் மூலம், அனைத்து விதமான நெல் விதைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பசுந்தாள் விதைகளை சுத்திகரிக்க இயலும். இப்பிரிவு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் விதை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தின் திட்ட மதிப்பு ரூபாய் 9.96 லட்சமாகும்.

மேலும், தானியங்கி தீவனமிடும் இயந்திரமானது ஒவ்வொரு கோழிக்கும் தேவையான தீவனம் சீரான மற்றும் சரியான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதோடு வேலையாட்களின் தேவையும், நேரமும் குறைக்கப்படுகிறது. மேலும் தீவனமானது சுகாதாரமான முறையில் கோழிகளுக்கு அளிக்கப்பட்டு தீவன விரயமும் குறைக்கப்படுகிறது. எனவே இந்த தானியங்கி இயந்திரம் பண்ணை பொருளாதாரம் மேம்பட வெகுவாக உதவும்.

மேலும் இவ்வியந்திரம் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதிரியாகவும், ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவியாகவும், உழவர்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தும் ஒரு செயல்முறை விளக்கமாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. இந்த இயந்திரம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிதி மூலம் சுமார் ஒன்பது லட்சம் ரூபாயில் நிறுவப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு பயிர் மேலாண்மை இயக்குநரகம், இயக்குநர், கலாராணி மற்றும் உழவியல் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.