சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட கோவை வீரர்கள் தேர்வு!

நேபாளில் நடைபெற உள்ள இந்தோ நேபாள் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் விளையாட நேபாள் செல்ல உள்ள கோவையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை இரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கி 5 ஆம் தேதி வரை யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் புரமோசன் ஆப் இந்தியா சார்பாக இந்தோ நேபாள் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நேபாளில் உள்ள போக்காரா நகரில் நடைபெற உள்ளது.

சர்வதேச அளவில் நடைபெற உள்ள இதில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீர்ர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் விளையாட கோவையை சேர்ந்த கோவை ஸ்பார்ட்டன்ஸ் அணியினர் தேர்வாகியுள்ளனர். சர்வதேச தொடரில் விளையாட உள்ள இந்த குழுவினர் நேபாள் செல்ல இரயில் நிலையம் வந்தனர். அப்போது நேபாள் செல்லும் வீரர்களை பெற்றோர்கள் கைகுலுக்கி ஆரத்தழுவி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

நேபாள் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் கூறுகையில், ஏற்கனவே மாநில அளவில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வென்றுள்ளோம். இதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடி வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், தற்போது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக சர்வதேச அளவில் விளையாட நேபாள் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற உள்ள இந்தோ நேபாள் தொடரில் கோவை வீரர்கள் விளையாட உள்ளது உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.