உருவாகிறதா திமுக, பாஜக கூட்டணி?

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் மறைவுக்குப்பின் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் உருவாகிக்கொண்டே வருகின்றன. கருணாநிதிக்குப் பின் திமுகவில் மு.க.அழகிரி லேசான போர்க்கொடி தூக்கினாலும், மு.க.ஸ்டாலினின் முழுக்கட்டுப்பாட்டில் ஒற்றைத் தலைமையாக திமுக எழுந்துவிட்டது.

அதேநேரத்தில், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் என்ற நிலை உருவாகி, பின்னர் ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரட்டைத் தலைமை சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்தது. ஆளும் கட்சியாக இருந்தவரை அதிமுகவில் இரட்டைத் தலைமை என்பது வெற்றிகரமாகவே இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப்பின் எதிர்கட்சியாக இரட்டைத் தலைமைக்குள் ஓராண்டாகவே பனிப்போர் வெடித்தது. அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், இரட்டைத் தலைமை இரண்டு ஒற்றைத் தலைமைகளாக மாறியுள்ளன.

இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கட்சியின் 63 எம்.எல்.ஏ.க்கள், 95 சதவீத நிர்வாகிகள் ஒரு அணியாகவும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள், ஒரு மக்களவை உறுப்பினர், 5 சதவீத நிர்வாகிகள் என மற்றொரு அணியாகவும் அதிமுக பிளவுப்பட்டு நிற்கிறது. இரு அணிகளுமே தாங்கள் தான் உண்மையான அதிமுக என உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

தேர்தலை சந்திக்க இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுக்கான உரிமையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை இரு தரப்புமே நாடியுள்ளன. இரண்டு தரப்பினருமே மத்திய மோடி அரசின் தயவு தங்களுக்கு தான் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இடைக்கால பொதுச்செயலராக தேர்வாகியுள்ள எடப்பாடி கே.பழனிசாமிக்கு, தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை வாழ்த்து தெரிவித்ததும் மத்திய பாஜக ஆதரவு தங்களுக்கு தான் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்தனர். ஆனால், பிரதமர் மோடி இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை,

எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரில் பிரதமர் மோடியின் ஆதரவு யாருக்கு என்பதற்கான போட்டி இப்போது உருவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பெற வேண்டுமெனில் அதற்கு மத்திய பாஜக அரசின் தயவு தேவை என கருதி இ.பி.எஸ், ஓ.பி.எஸ். என இருதரப்பினருமே போட்டி போட்டு பிரதமர் மோடியின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகின்றனர். தில்லிக்கு 4 நாள் பயணமாக சென்றிருந்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கிடைக்காததால் பயணத்திட்டத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையுடன், எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, மோடியின் முகம் இறுக்கமாகவே இருந்ததை பார்க்க முடிந்ததாகவும், அதேநேரத்தில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் வேட்புமனுத் தாக்கலின் போது, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருடன் சகஜமாக புன்முறுவலுடன் பிரதமர் மோடி நடந்து சென்ற புகைப்படத்தை பார்க்கும்போதும், ரவீந்திரநாத் குமாரை கட்சி சாரா உறுப்பினராக பதிவு செய்யும்படி எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்துக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும், ஏதோ ஒரு சமிக்ஞையை எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிரதமர் மோடி கொடுக்கிறார்.

அதனால் தான், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உதயக்குமார் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது. 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ தூசி தட்டியுள்ளது என்கின்றனர் ஓ.பி.எஸ். தரப்பினர்.

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவின்போது, பிரதமர் மோடி முக்கிய அலுவல்களில் இருந்ததால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும், சென்னையில் நிச்சயம் சந்திப்பார் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியான நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இருநாள் பயணமாக சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரையுமே சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. மாறாக, விமான நிலையத்தில் வரவேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்ப பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி வழங்கினார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை காங்கிரஸ் முற்றிலும் புறக்கணித்தது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையிலான உடல்மொழியை பார்க்கும்போது தமிழக அரசியல் திசை மாறுவதற்கான பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பாஜக உத்தி என்ன?:

பாஜகவை பொறுத்தவரை 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து கணிசமான மக்களவை உறுப்பினர்களை பெற்றாக வேண்டும் என்பது தான் பிரதான இலக்காக வைத்திருக்கிறது. அதற்கு வலுவான கூட்டணி தேவை. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ந்து வெற்றிப் பாதையில் இருப்பதால் அதில் இருக்கும் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலிலும் அப்படியே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.

மேலும், 13 சதவீத சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு உறுதியாக விழுந்து வருவதால், பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக விரும்பாது. அப்படி இருக்கும்போது, திமுக கூட்டணிக்கு வலுவான போட்டி கொடுத்து வெற்றிப்பெற வேண்டுமெனில் இரட்டைத் தலைமையில் இருந்த அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து 1998 மக்களவைத் தேர்தல் வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜக மேலிடம் இருந்தது.

2019 மக்களவைத் தேர்தலில் 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக கூட்டணி, 2021 பேரவைத் தேர்தலில் 40 சதவீத வாக்குகளாக உயர்ந்தது. திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையே வாக்கு வித்தியாசம் 5.5 சதவீதம் மட்டுமே. அதே அணியை தொடர்ந்தால் கொங்கு மண்டலம் மற்றும் தென்மாவட்டங்களில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளையாவது வெற்றிப் பெற்றிருக்கலாம் என்பது பாஜக மேலிடத்தின் கணக்காக இருந்தது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை காங்கிரஸ் முற்றிலும் புறக்கணித்தது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையிலான உடல்மொழியை பார்க்கும்போது தமிழக அரசியல் திசை மாறுவதற்கான பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், இரட்டைத் தலைமையை உடைத்து ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உருவாக்கியதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை. ஏனெனில், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் 95 சதவீத கட்சி நிர்வாகிகள் இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களம் இறக்கினால் திமுக கூட்டணி மீண்டும் 2019 மக்களவைத் தேர்தல் போல வெற்றிக்கனியை பறிக்கக்கூடும். தென்மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் முற்றிலுமாக அதிமுக, பாஜக அணிக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும் என்பது பாஜகவின் கணக்கு.

மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும், பேரவைத் தேர்தலின்போது பாஜகவை கழற்றிவிட்டு காங்கிரசுடன் கைகோர்க்க தயங்கமாட்டார்கள், ஏற்கனவே, துணைப் பொதுச்செயலர் கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலர் சி.பொன்னையன் உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இரட்டை இலை முடங்கும் பட்சத்தில் திராவிட கருத்தியலுக்கு எதிராக தமிழ்தேசியம், ஹிந்துத்துவா கருத்தியல்கள் வலுப்பெறக்கூடும். இதன் மூலம் பலமுனை போட்டியால் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனதாதள் உடைந்து பாஜக வலுப்பெற்றது போல தமிழகத்திலும் பாஜக வலுப்பெறும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருந்தது, கடந்த சில மாதங்களாக வடதமிழகத்தில் கூட பாஜகவின் போராட்டங்களுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருவதை பார்க்கும்போது பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் 10 சதவீத வாக்குகளுக்கு மேல் கிடைக்கலாம்.

அதேநேரத்தில், பாமக, அமமுக, தேமுதிக மற்றும் உதிரி கட்சிகளுடன் பன்னீர்செல்வம் தரப்பை இணைத்துக்கொண்டு அல்லது தவிர்த்துவிட்டு தேர்தலை சந்தித்தால் கணிசமான தொகுதிகளை பெற முடியும் என தேர்தல் நுணுக்கங்களை நுட்பமாக ஆய்வு செய்யும் சில பாஜக தலைவர்கள் கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

2014 இல் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாக களம் இறங்கியபோது மும்முனை போட்டியில் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால் கன்னியாகுமரி, தருமபுரி, புதுவை ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது.

அதேபோல, இப்போது, திமுக, காங்கிரஸ் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, பா.ஜ.க தலைமையிலான அணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி அல்லது பன்னீர்செல்வத்தையும் கழற்றிவிடும் போது அது 5 முனை போட்டியாக உருவெடுத்தால் கன்னியாகுமரி உள்பட சில தொகுதிகளையாவது பாஜக கூட்டணியால் பெற முடியும்.

மாறாக, ஒன்றுபட்ட அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, அ.ம.மு.க மற்றும் உதிரி கட்சிகள் என திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரே அணியை திரட்டுவது சாத்தியம் அல்ல, அப்படியே திரட்டினாலும் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுக அணியில் ஒருமுகமாக குவிந்து 2004, 2019 மக்களவைத் தேர்தல்கள் போல முடிவு வந்துவிடக்கூடும் என பாஜக மேலிடத்துக்கு கட்சி நிர்வாகிகள் சிலர் புள்ளிவிவரத் தகவல்களை அனுப்பியுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்தால் இந்திரா காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரதமர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டால் அந்த அணி 50 சதவீத வாக்குகளை தாண்டி அதிக தொகுதிகளை கைப்பற்றிவிடுகிறது. தமிழகத்தில் இந்திரா காந்தி தலைமைக்கு 55.8 சதவீத வாக்குளும், ராஜீவ் காந்தி தலைமைக்கு 60.6 சதவீத வாக்குகளும், சோனியா காந்தி தலைமைக்கு 57.4 சதவீத வாக்குகளும், ராகுல் காந்தி தலைமைக்கு 53 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

2024 மக்களவைத் தேர்தலிலும், ராகுல் காந்தியை திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும்போது அக்கூட்டணி அதிக வாக்குகளை பெறலாம். கடந்தமுறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 9 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. தமிழகம், புதுவையில் இருந்து கிடைத்த 9 தொகுதிகளால் தேசிய அளவில் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் அதிமுகவின் இரு பிரிவுகளையும் பாஜக கழற்றிவிட்டு பிற கட்சிகளை சேர்த்துக்கொண்டு தனி அணியை பாஜக உருவாக்கும் பட்சத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவை தனித்து களம் இறக்கி 37 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றதுபோல, ஸ்டாலினும் காங்கிரசை கழற்றிவிடக்கூடும் அல்லது காங்கிரசுக்கான எண்ணிக்கையை மேலும் குறைக்கக்கூடும்.

காங்கிரசை திமுக கழற்றிவிட்டாலும், தொகுதி எண்ணிக்கையை குறைத்தாலும் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக லாபம் தான். இந்த இரண்டில் ஒன்று நடக்கும் பட்சத்தில் நாட்டில் இப்போதுள்ள அரசியல் சூழலில் தேர்தல் நடந்தால் காங்கிரசால் 50 மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை கூட தாண்டுவது சிரமம் தான். பாஜக நுழைய முடியாது என கருதப்பட்ட மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் கூட மோடி, அமித்ஷா ஆகியோர் அரசில் லாப, நஷ்ட கணக்குகளை நுட்பமாக ஆய்வு செய்து பாஜக முதல்நிலை கட்சியாக வளர்த்துள்ளனர். நாட்டிலேயே பாஜக வலுவாக வளராமல் இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். பிரதான திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுக இரு பிளவுகளாக மாறியுள்ள நிலையில், பாஜகவை தமிழகத்தில் வளர்த்தெடுக்க எந்த வகை உத்தியை பாஜக கடைபிடிக்கப் போகிறது என்பது அடுத்தடுத்த சில மாதங்களில் தெரியவரும்.