பாசம் ஒருபுறம் புத்தி ஒருபுறம்… எப்படி முடிவெடுப்பது?

வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் ஏதேனும் ஒரு உறுதியான முடிவை எடுக்கத் தேவை உள்ளது. அத்தருணத்தில் பாசத்திற்கும் புத்திக்கும் இடையிலான போராட்டத்தால் தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. வாழ்க்கையில் நாம் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். சத்குருவின் பார்வையில் இங்கே விடை!

இந்தியப் பிரதமரும், அமெரிக்க அதிபரும் ஓர் ஓட்டலில் உணவு வேளையில் சந்தித்தனர். தற்செயலாக அங்கு வந்த இங்கிலாந்து பிரதமர் ஆச்சர்யமானார்.

“அட, என்ன இங்கே மாநாடு?”

“தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மீது குண்டு போட்டுப் பதினான்கு மில்லியன் பாகிஸ்தானியர்களையும், கூடவே முட்டைகள் விற்பனை செய்யும் ஒருவனையும் கொல்லத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம்“ என்றார் இந்தியப் பிரதமர். இங்கிலாந்து பிரதமரின் நெற்றி குழப்பத்தில் சுருங்கியது.

“முட்டை விற்பவனா, என்ன சொல்கிறீர்கள்?” என்றார். இந்தியப் பிரதமர் மலர்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் பக்கம் திரும்பிச் சொன்னார், “நான் சொல்லலே… பாகிஸ்தானியர்களைப் பத்தி யாரும் பொருட்படுத்த மாட்டாங்கன்னு!”

இப்படித்தான்… நமக்கு வேண்டியவர்கள் என்றால் ஒருவிதமாகவும், வேண்டாதவர்கள் என்றால் வேறுவிதமாகவும் மனம் தீர்ப்பு எழுதும், அதில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும், உங்கள் விருப்பப்படி முடிவு எடுக்க முடியாது. அவசியம் என்னவோ, அதற்கு ஏற்றாற்போல்தான் முடிவு எடுக்க வேண்டி வரும்.

ஒரு பருத்த மரத்தைக் குறுக்கில் அறுக்க வேண்டும். நீங்கள் விரும்பினால்கூட அதை ஒரு சாதாரண பிளேடு வைத்து வெட்ட முடியாது. கூரான பற்கள் கொண்ட உறுதியான ரம்பத்தைக் கொண்டுதான் அறுக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்வது என்று முடிவு செய்ய வேண்டியது நீங்கள் அல்ல; அந்தச் சூழ்நிலையின் தேவைதான் அதைப் பெரும்பாலும் முடிவு செய்யும்.

‘இவள் என் மனைவி, இவள் என் மகள்; அதனால், இப்படி முடிவு எடுத்தேன்’ என்று உணர்ச்சி வேகத்தில் முடிவு எடுத்தால், அது முட்டாள்தனமான முடிவாகிவிடும் அபாயம் இருக்கிறது.

உங்களுக்கு மிக நெருக்கமானவர்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது, பெரும்பாலும் அந்த நெருக்கம் காரணமாகவே நீங்கள் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். வாழ்க்கையை உங்களுக்கு ஏற்றவாறு அர்த்தப்படுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டு, அதைப் பாரபட்சமின்றிக் கவனியுங்கள்.

“பாசம் ஒருபுறம், புத்தி ஒருபுறம் என்னை இழுக்கின்றன. எதற்குப் பணிந்து முடிவு எடுப்பது?” உங்களுக்கு மிக நெருக்கமானவர்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது, பெரும்பாலும் அந்த நெருக்கம் காரணமாகவே நீங்கள் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். வாழ்க்கையை உங்களுக்கு ஏற்றவாறு அர்த்தப்படுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டு, அதைப் பாரபட்சமின்றிக் கவனியுங்கள். கற்றதைக் கொண்டு உங்களுக்கென சில கருத்துகள் இருப்பதால் மட்டுமே அறிவு வேலை செய்துவிடாது. மனதில் இருக்கும் படபடப்பை விலக்கினால்தான், தெளிவு வரும். தெளிவு இருந்தால்தான் புத்தி வேலை செய்யும்.

வாழ்க்கைப் பாதையில் தெளிந்த கவனத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தால்தான், பயணத்தை சிடுக்காக்கிக் கொள்ளாமல் நடந்து செல்ல முடியும், எதனுடனும் மோதிக்கொள்ளாமல் காயங்களைத் தவிர்க்க முடியும், சுதந்திரமாக சரியான திசையில் செல்ல முடியும்.

குருவிடம் சீடன் கேட்டான்… “என் வாழ்க்கையில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எப்படி முடிவு செய்வது?”

“உன் கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன். அதற்குள் இந்த மேஜையைத் தயார் செய்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் குரு.

மறுநாள் குரு வந்து பார்த்தபோது, மேஜையின் பெரும்பகுதி தயாராகியிருந்தது. நான்கு கால்களையும் பொருத்த வேண்டியதுதான் பாக்கி! சீடன், மேஜையின் ஒவ்வொரு காலைப் பொருத்தும் போதும், கோக்கும் ஆணியை மூன்று முறை சீராக அடித்து உள்ளே இறக்குவதை குரு கவனித்தார். ஓர் ஆணி மட்டும் கொஞ்சம் முரண்டு பிடித்தது.

குரு பார்க்கிறாரே என்று பதற்றப்பட்டு, சீடன் நான்காவது முறை கூடுதல் பலத்தோடு ஆணியின் மீது ஓங்கி அடித்தான். அந்த ஆணி தேவைக்கு அதிகமாகவே மரத்துக்குள் இறங்கிவிட்டது. அந்த இடத்தில், மேஜையில் சிறு பிளவு ஏற்பட்டுவிட்டது.

குரு புன்னகைத்தார், “கவனித்தாயா… மற்ற ஆணிகளுக்குப் பயன்படுத்திய அதே வேகம் இந்த ஆணிக்கு போதவில்லை. ஆனால், நீ அவசரப்பட்டதில் மேஜையே காயப்பட்டுவிட்டது. ஒவ்வொரு செயலும் உன் செயல்தான். ஆனால், ஒவ்வொரு செயலையும் தனித்தனியாக அந்தந்தச் சூழலுக்கு ஏற்றபடி, முழுமையான கவனத்துடன் செய்ய வேண்டும். உணர்ச்சி வேகத்திலோ, பழக்க தோஷத்திலோ எதைச் செய்தாலும், அதன் நோக்கம் நிறைவேறாமல் போகும்!”

இதேபோலத்தான், சில தருணங்களில் குழந்தையை பூப்போலக் கையாள வேண்டும். வேறு சில சந்தர்ப்பங்களில் சற்றே கடுமையாகக் கையாள வேண்டி இருக்கலாம். அது உங்கள் குழந்தையா? இல்லையா? என்பது கேள்வியல்ல. அந்தச் சூழ்நிலை உங்களிடம் எவ்விதமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறது என்பதுதான் முக்கியம். அதுதான் உங்கள் முடிவைத் தீர்மானிக்க வேண்டும்.

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம் இரண்டையும் வாழ்க்கையில் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.