சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேர்வு

68 வது தேசிய திரைப்படங்கள் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

68 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு மாலை 4 மணிக்கு தொடங்கி பல்வேறு பிரிவுகளுக்கு தேசிய விருகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன.

சிறந்த தமிழ் படத்திற்கான விருது வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம்தேதி வெளியான இந்த திரைப்படம், 3 பெண்களின் கதையை மையமாக கொண்டு, ஆந்தாலஜி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கும். இவர்களின் வழியே சமூகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளை பேசும் வகையில் படத்தை இயக்குனர் வசந்த் அமைத்திருப்பார்.

யதார்த்த சினிமா மூலம் பெண்களின் பிரச்சனையை பேசும் இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை உள்ளிட்டவை சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜாவின் இசை கூடுதல் பலம் சேர்த்தது.

இந்த படத்தில் சிவரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமவுலி, தேவகியாக பார்வதி மேனன், சரஸ்வதியாக காளீஸ்வரி சீனிவாசன், சந்திரனாக கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

ஹம்சா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்திருந்தார். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அடுத்ததாக தேசிய விருதைப் பெறவுள்ளது.

சிறந்த எடிட்டிங்கிற்காக இந்த படத்தில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சிறந்த துணை நடிகைக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 விருதுகளை சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் பெற்றுள்ளது.