கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கே.ஐ.டி) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப முறைகளை கையாள்வதற்கான நேரடி பயிற்சிகளை பெற முடியும். மேலும் இந்த கல்லூரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளதால், வளர்ந்து வரும் நிகழ்கால மற்றும் எதிர்கால தொழில் நுட்பங்களை தங்களது பாடத்திட்டத்தில் இணைத்து மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகளை பெறவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

மேலும், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி கூட்டுமுறை, ஆசிரியர் மற்றும் மாணவர் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவையும், ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, மிக்ஸ்டு ரியாலிட்டி போன்ற நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள் இந்த கல்லூரியில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் உஷா நடேசன், பேராசிரியர் லால் ராஜா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.