அலுவலகத்தில் இனி நின்றுக் கொண்டே தூங்கலாம்!

உலகிலுள்ள சில நாடுகள் தங்களின் பணியாளர்களின் நலனுக்காக வாரத்தில் நான்கு நாள் வேலைக்கு மாறியுள்ளன. ஆனாலும், பல நாடுகளில் உள்ள மக்கள் வாரத்தில் 6 நாட்கள் என கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை வேலை செய்யும் ஊழியர்களுக்கு அலுவலக வேலையின் அழுத்தத்தின் காரணமாக உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், பணி நேரத்திற்கு நடுவே தூக்கம் வராத கண்களையும், தூங்காதவர்களையும் பார்த்திருக்கவே முடியாது. அதுவும் ஒருவர் தொடர்ச்சியாக வேலையில் ஈடுபடும் போது, அவருக்கு ஏற்படும் அயர்ச்சி மற்றும் களைப்பு ஒழுங்காக வேலையும் செய்ய விடாமல், தூங்கவும் விடாமல் செய்யும்.

ஒருவர் ஓய்வெடுப்பது என்பது ஒரு மோசமான விஷயம் என்று கருதப்படுவதில்லை. ஆனால் வேலை நேரத்தில் தூங்குவது சற்று கடுமையாகவே பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக பல ஊழியர்கள் இருக்கையில் சோர்வுடன் அமர்ந்திருப்பதை காண முடியும். சில நேரங்களில் பாத்ரூமிற்கு சென்று சிறிது நேரம் தூங்கிவிட்டு வரும் சம்பவங்களும் நிகழும். இதனால் அவர்களால் சற்று விழிப்படைந்து வேலையை தொடர முடியும்.

ஆனால் நமது உடலின் இயல்பான செயலை நம்மால் புறக்கணிக்க முடியாது. இதை மனதில் வைத்து, பணியாளர்களின் இப்படியான சிரமங்களை குறைக்கும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அலுவலக வேலைக்கிடையே தூக்கம் வந்தால் ஊழியர்கள் குட்டி தூக்கம் போடும் வகையில் நின்றபடியே வசதியாக தூங்கிக்கொள்ளும் தூங்கும் பெட்டிகளை உருவாக்கியுள்ளது.

நின்றபடியே எப்படி தூங்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்யவும், அதே சமயத்தில் தூக்கம் வந்தால் தூங்குவதற்கும் முக்கியமான ஒரு ஏற்பாட்டை தான் இந்நிறுவனம் செய்துள்ளது.

இதற்காக நாப் பாக்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பாக்ஸினுள் சென்று உட்புறமாக தாழிட்டு ஊழியர்கள் நின்றபடியே தூங்கிக்கொள்ளலாம்.

ஆனால் இப்படி நின்றுக் கொண்டு தூங்கினால் முதுகு, கால்கள் வலிக்குமே என்று நாம் எண்ணலாம். இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படாத வண்ணம்  தலை, முழங்கால்கள் மற்றும் முதுகு அனைத்தும் வசதியாகத் தாங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளே செல்பவர் கீழே விழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெட்டி காமின் பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை டோக்கியோவைச் சேர்ந்த இடோகி என்ற பர்னிச்சர் நிறுவனத்துடன் இணைந்து கொயோஜு ப்ளைவுட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ளது.

இடோகி பர்னிச்சரின் இயக்குநர் சாகோ கவாஷிமா இதுகுறித்து கூறுகையில்: இந்த நாப் பாக்ஸ்க்குள் ஃபிளமிங்கோ பறவையைபோல ஊழியர்கள் தூங்கிக்கொள்ளலாம். ஒருவர் நிம்மதியாக தூங்குவதற்கு கழிவறைகள் சிறந்த இடம் இல்லை. மேலும், ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்காது.

மேலும், பல ஜப்பானியர்கள் இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்கிறார்கள். ஆகவே நிறுவனங்கள் இந்தப் பெட்டியை ஓய்வெடுப்பதற்கான மிகவும் நெகிழ்வான அணுகுமுறையாகப் பயன்படுத்தலாம் என்று  கூறியுள்ளார்.

மேலும், இந்த நாப் பாக்ஸின் விலை மற்றும் சந்தையில் விற்பனையாவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் வடிவமைப்பு படங்கள் மட்டுமே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

ஜப்பானில் உள்ள வேலை கலாச்சாரம் பரபரப்பாக இருப்பதில் பெயர்பெற்றது மற்றும் ஊழியர்கள் வழக்கமாக 10 மணிநேர ஷிப்ட்களை எடுத்துக்கொள்வதும் அவர்களை தூக்கமின்மைக்கு தூண்டுகிறது.

முன்னதாக, உலகிலேயே ஜப்பானில்தான் அதிக நேரம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பதால் இயற்கையான உயிரியல் மற்றும் ஆரோக்கிய தேவைகளை புறக்கணிக்க முடியாது. மறுசீரமைப்பான ஓய்வு நன்றாக வேலை செய்ய வைக்கும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.