கிணத்துக்கடவு ஊராட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் 4 வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக்கான இடம் காலியாக உள்ளன.

இந்த பதவிக்கு நெம்பர்.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என மொத்தம் 4 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், குருநல்லி பாளையம் வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 4 வாக்குச்சாவடிகளில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணும் பணி கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டி வைக்கப்பட்ட சீல் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 டேபிள்களில் வாக்குகள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் முதலில் குருநல்லிபாளையம் 4 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பேச்சிமுத்து, திறவுகோல் சின்னத்திலும், தாமோதரன் சீப்பு சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில் தாமோதரன் 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அதேபோல் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்றதலைவர் தேர்தலில் மஞ்சு சவுமியா பூட்டு மற்றும் சாவி சின்னத்திலும், சதீஷ்குமார் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில் சதீஷ்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மஞ்சு சவுமியாவை விட 114 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் சான்றிதழை பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.