ஓ.பி.எஸ் இபிஎஸ் இடையே பிளவு : தலா 400 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர் 400 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும்  சேதப்படுத்தப்பட்டது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வருவாய் துறையினர்  தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், எந்தவிதமான அசம்பாவிதங்கள்  நடக்கக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.