வேகமாக அழிந்து வரும் அமேசான் காடுகள்

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடு பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா உட்பட சுமார் ஒன்பது நாடுகளில் பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த அமேசான் காடுகள் பிரேசிலில்தான் அதிகளவில் பரந்து காணப்படுகின்றன. பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் இந்த அமேசான் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவை பெருமளவில் உறிஞ்சி சுற்றுசூழல் நலனுக்கு பெரிதும் உதவுகிறது. உலகின் மிகப்பெரிய மழைக்கடாகவும் உள்ளதோடு, அதிகளவில் நன்னீரையும் இந்தக் காடுகள்தான் அளித்து வருகின்றன. இதன் பரப்பு மொத்த ஐரோப்பிய யூனியனை விட பெரியது என்றே சொல்லலாம்.

மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மூலிகைகள் மற்றும் அரிய வகை உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன. உலகத்தின் நுரையீரல் என்று சொல்லப்படும் இந்த அமேசான் மழைக்காடுகள் தற்போது வேகமாக அழிந்து வருகிறது.

குறிப்பாக நடப்பு ஆண்டில் மட்டும் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் நியூயார்க் நகரத்தை விட 5 மடங்கும், டெல்லியை விட 2.5 மடங்கு பெரிய பகுதியும் அழிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3,988 சதுர கி.மீ அமேசான் காடுகள் பகுதி (1,540 சதுர மைல்கள்) அழிக்கப்பட்டது என்று தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே தெரிவித்துள்ளது. மேலும், இன்பே தரவுகளின்படி, 15 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மட்டும் அமேசானில் அதிக எண்ணிக்கையிலான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தீ விபத்துகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணப்படுவதைக் காட்டிலும் குறைவானதே. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதமே பெரும் காடு இழப்பது பதிவாகியுள்ளது தெரிகிறது.

இந்த ஆண்டில் மட்டும் மழைக்காடுகளின் மையத்தில் உள்ள அமேசானாஸ் மாநிலம் முதல் முறையாக மற்ற மாநிலங்களை விட அதிக அழிவை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதங்களில் இருந்த அழிவின் அளவை விட 10.6% அதிகமாக உள்ளது. டேட்டர்-பி என்ற இயற்கை குறித்தத் தரவுத் தொடர் 2015 ஆம் ஆண்டு தொகுக்கத் தொடங்கியதிலிருந்து இன்று வரையிலான அதிகபட்ச அழிவு நிலையை பதிவிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் அழிவு மட்டுமே 5.5% உயர்ந்து 1,120 சதுர கி.மீ ஆக இருந்தது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச அழிவாக பதிவிடப்பட்டுள்ளது. அமேசானாஸ் மாநிலத் தலைநகர் மனாஸுக்கு மேற்கே சாலைக்கு அருகில் உள்ள காடுகள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக, மரம் வெட்டுபவர்கள் மதிப்புமிக்க மரங்களை பிரித்தெடுத்த பிறகு, பண்ணையாளர்கள் மற்றும் நிலத்தை அபகரிப்பவர்கள் விவசாயத்திற்காக நிலத்தை சுத்தப்படுத்த தீ வைக்கின்றனர். இதனாலும் காட்டின் பெரும்பகுதி காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரேசிலில் உள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள், அந்த நாட்டின் குடியரசு தலைவர் ஜெய்ர் போல்சனாரோ, சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை திரும்பப் பெறுவதாகவும், லாபத்திற்காக பொது நிலத்தை அழிக்கும் மரம் வெட்டுபவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் நில ஊக வணிகர்களை ஊக்கப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.