தேசிய அளவிலான யோகா போட்டியில்
கோவை மாணவர்கள் சாதனை

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் முதல் பரிசுகளை பிடித்த கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்தமானில் அண்மையில் 6 வதுதேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம் சார்பாக கோவையில் இருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை 10 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 பேர் முதல் பரிசுகளையும், ஒருவர் இரண்டாம் பரிசுகளையும், 3 யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்தமானில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இனிப்புகள் கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கூறுகையில், தொடர்ந்து இது போன்று சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.