திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் வயது முக்கியம் இல்லை – கணினி துறையில் சாதித்த அர்னவ்

திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் வயது என்பது முக்கியம் இல்லை. நம்பிக்கை இருந்தால் போதும், எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கோவையை சேர்ந்த அர்னவ் 14. சிறு வயதில் இருந்தே கணினி துறையில் சாதிக்கணும் என்பது இவருடை கனவாக இருந்தது.

அதன் முயற்சி தான், தற்போது கணினி துறையில் சாதித்து பல பதக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார் அர்னவ். இவர் தனது 10 வது வயதில் C, C++, வெப் டெவலப்மெண்ட், ஜாவா பயிற்சிகளை கற்றுக்கொண்டு, பட்டச்சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அர்னவ் 6வது வகுப்பு படிக்கும்போது, கோவை ஜே.சி.டி. பொறியியல் கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் அல்லது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை சம்பந்தமான மாநில அளவிலான கருத்தரங்கு-போட்டி நடந்தது.

இதில், தமிழகத்திலிருந்து பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அந்த போட்டியில் கலந்துகொண்டு வியப்பூட்டும் விளக்கத்தை அளித்து முதல் பரிசை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து, கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிகளில் நடந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கு-போட்டிகளிலும் முதல் பரிசை தட்டி சென்றார்.

இவர் 7வது வகுப்பு படிக்கும்போது, பெருந்துறை கொங்கு என்ஜினியரிங் கல்லூரியில் சர்வதேச அளவிலான செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு-போட்டி நடந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் முதல் இடம்பிடித்து சாதனை படைத்தார்.

இது தவிர, கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி, காருண்யா கல்லூரி, குமரகுரு கல்லூரிகளில் நடந்த கருத்தரங்கு-போட்டிகளில் பங்கேற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

மேலும், கோவை ஸ்கூல் ஆப் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் அமைப்பில் இணைந்து உள்ள உலகின் முதல் இளம் வயது (11வயது)மாணவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். தனது 11வயதில் இரத்தினம் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள பல மென் பொருள் நிறுவனத்திற்கு புதிய புதிய Project களையும் தயார் செய்து கொடுத்துள்ளார்.

கூகுள் டென்சர் ப்ளோ வில் (Google Tensorflow) செயற்கை நுண்ணறிவு தொடர்பாக உலக அளவில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றும் உரையாற்றி உள்ளார். இது தவிர இன்போசிஸ் நிறுவனம் இந்திய அளவில் நடத்திய போட்டியில் 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் முதல் 5 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்தார்.

இது குறித்து அர்னவ் கூறியதாவது, ‘டெஸ்லா அதிபர் எலன் மஸ்க்தான் என்னுடைய ரோல் மாடல். அவரை போல் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். விரைவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு நிறுவனத்தை தொடங்க உள்ளேன். அதன்மூலம், கணிப்பொறி, மென்பொருள், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், வங்கி, நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்றார் அர்னவ்.