டாப் 25 படங்களின் பட்டியலில் 2 வது இடம்பெற்ற கடைசி விவசாயி!

லெட்டர் பாக்ஸ்ட் (Letterboxd) என்ற இணைய தளம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தரவரிசைப் படுத்தி வருகின்றது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டாப் 25 பட்டியலில் தமிழில் வெளியான கடைசி விவசாயி படம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளியான படங்களை அதாவது, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் தியேட்டர், ஓடிடி உள்ளிட்ட தளங்களில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த டாப் 25 படங்களில் டாக்குமென்ட்ரி, நான் ஃபிக்சிங் உள்ளிட்டவைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரேட்டிங் அடிப்படையில் இவை தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடிக்க குறைந்தது 1000 புள்ளிகளாவது பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் 4.5 ரேட்டிங்கை பெற்று சீன மொழி படமான Everthing everywhere all at once படம் முதலிடத்தை பிடித்துள்ளது. 4.3 ரேட்டிங்கை பெற்று டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஓடிடி.,யில் வெளியான கடைசி விவசாயி படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கிராமங்களிலும் இப்பொழுது விவசாயம் அழிந்து வரும் நிலையில் தனது நிலத்தையும், அதில் உள்ள பயிர்களையும் காப்பாற்ற நினைக்கும் ஒரு விவசாயியின் உணர்வை இந்தப் படம் பிரதிபலிப்பதோடு, இயற்கை விவசாயத்தையும் எடுத்துக் கூறுகிறது. கதாபாத்திரங்களின் யதார்த்த நடிப்பு பலரிடமும் பாராட்டை பெற்றது. ஆனால் இந்தப் படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. தற்போது அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே தெரிகிறது.

இந்த டாப் 25 உலக தர வரிசை பட்டியல் படங்களில் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் 6 வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் உலக அளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் 11 வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் வெளியாகி 30 நாட்களில் உலகம் முழுவதும் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில் கடைசி விவசாயி, ஆர்ஆர்ஆர், விக்ரம் ஆகிய படங்களே உலக சினிமா தர வரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.