மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்; ஜூலை 1 பதவி ஏற்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக, பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஷிண்டே பக்கம் திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டிருந்தார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேற வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதில் 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எம்.எல்.ஏக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கவில்லை.

அதனை தொடர்ந்து, பெரும்பான்மையை இழந்த உத்தவ் தாக்கரே நேற்று இரவு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, பாஜக எம்.எல்.ஏக்களையும், ஆளுநரையும் சந்தித்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் ஜூலை 1ம் தேதி மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். துணை முதல்வராக சிவ சேனாவில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கிறார்.