ரோட்டரி கிளப் சார்பில் ‘டிரான்ஸ்மாம்’ துவக்கம்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 16 திருநங்கைகள் இணைந்து நடத்தும் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம் துவக்க விழா நடைபெற்றது.

இதில் ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் ஸ்ரீனிவாசன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி மாவட்ட 2022-23 இளைர்கள் சேவை பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி கீர்த்தி விவேக், 2022-23 உதவி கவர்னர் சுமித் குமார் பிரசாத் பங்கேற்றனர்.

டிரான்ஸ்மாம் ரோட்ராக்ட் கிளப்புக்கு சர்வதேச ரோட்டரி கிளப் அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொண்ட 2021-22 தலைவர் கேப்டன் பாலாஜி பாபு, அவரது துணைநின்ற 2022 -23 தலைவர் சுந்தரேசன், 2021-22 செயலாளர் ஷியாம் மற்றும் 2022-23 செயலாளர் குமரன் ஆகியோரும் புதிய ரோட்டராக்ட் கிளப் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ரோட்டரி மாவட்டம் இளையர் சேவை பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில், திருநங்கை தன்ஷிகா, கடின உழைப்பாளி. அவர், முதுநிலை பட்டம் பெற்ற அவர், கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். டிரான்ஸ்மாம் பவுண்டேஷனில் ஒரு அறங்காவலராக உள்ள அவர், திருநங்கைகளின் தேவைகளை அறிந்து உதவி வருகிறார் என்றார்.

மற்றுமொரு உறுப்பினரான திருநங்கை அனுஷ்யா, டிரான்ஸ்மாம் ரோட்டராக்ட் கிளப்பின் செயலாளராக உள்ளார். ஊக்கமும் ஆற்றலும் கொண்ட இவர், சுய கட்டுப்பாடு மிக்கவர். சமையல் பணியில் தொடங்கி, தன்னம்பிக்கை பெற்று, ஓட்டுநராகவும், தொழில் முனைவோராகவும் மாறியுள்ளார். திருநங்கைகளின் தூணாக திகழ்ந்து உதவிட உழைத்துக் கொண்டிருக்கிறார்.

திருநங்கைகள் அனுஷ்யா மற்றும் தன்ஷிகா ஆகியோர், பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழும் இரட்டையர்களாக மாறியுள்ளனர். அனுஷ்யா, பலருக்கு வாகனங்களை ஓட்ட கற்றுக் கொடுத்து ஓட்டுனராக மாற்றியுள்ளார். அவர்கள் மதிப்பும் மரியாதையும் பெற்று பொருளீட்டி வருகின்றனர். திருநங்கை சங்கீதாவும் உபர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த முயற்சிகளை மாவட்ட ரோட்டரி பிரதிநிதி கீர்த்தி விவேக், காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் காருண்யா ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர் என்றார்.

டிரான்ஸ்மாம் பவுண்டேஷன் மற்றும் ரோட்ராக்ட் கிளப்புகள் இணைந்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மளிகை பொருட்கள் அளித்தல், தொழில் மற்றும் கலை திறன் மேம்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர். திருநங்கையர்களில் 50 உறுப்பினர்களுக்கு முதலுதவி பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, ஒரு நிலையான இடத்தை அமைத்து, சமுதாயத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ உதவிட ரோட்டரி கிளப் டவுன்டவுன் முடிவு செய்துள்ளது.