வெளிவரும் தமிழர் நாகரிகம்: கீழடியில் சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் வரும் 8 ம் கட்ட அகழாய்வில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகழாய்வு பணிகளின் போது, இங்கு நீல் வடிவ தாயக்கட்டை, பானை, உலைகலன், பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் மேற்புறம் 10 செ.மீ. உயரத்திற்கு கருப்பு நிறமும், கீழ்புறம் சிவப்பு நிறமும் கொண்ட சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. புனல் போன்ற அமைப்பு கொண்ட இந்த கிண்ணங்கள் சாயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கீழடியில் சாயப்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டது. ஆனால் சிவப்பு வண்ண சாய கிண்ணம் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், கீழடியில் தற்போது கருப்பு, சிவப்பு வண்ண சுடுமண்ணால் செய்யப்பட்ட கிண்ணமும் கண்டறியப்பட்டுள்ளது.