ஆஸ்கர் கமிட்டியில் உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு

இந்திய அளவில் வரவேற்கப்பட்டுள்ள திரைப்படங்களில் நடித்துள்ள சூர்யா ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் உலகளவில் பேசப்பட்ட படம். அதே போல, ஜெய் பீம் இந்திய அளவில் நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது. இந்த படங்கள் கடந்த ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்துகொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

சினிமா துறையில் மிகவும் பெரிதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது விழாவில் பங்கெடுக்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அந்த வாக்குபதிவில் அதிக வாக்குகளை பெறும் படத்திற்கோ அல்லது நடிகர், நடிகைகளுக்கோ அந்த விருது வழங்கப்படும்.

இதில், ஆண்டுதோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர்களின் விபரங்கள் மாறுபடும், இந்த பட்டியலில் உலகளவில் உள்ள ஏராளமான பிரபலங்கள் இடம்பெறுவர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 397 பேர் அடங்கிய கமிட்டி உறுப்பினர் பட்டியலை அகாடமி குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த 397 பேர் கொண்ட உறுப்பினர் பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் சூர்யா இடம்பெற்று உள்ளார். நடிகர் சூர்யா முதன் முறையாக ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது பெருமைக்குரியது.