அதிமுக பொதுக்குழு கூட்டத்தை; மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என, தெரியும் அந்த பிரச்சினைக்கு செல்ல விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுக்குழுவினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று இரட்டை தலைமை வேண்டாம் என்று முழக்கமிட்டு வருகின்றனர். இதனால், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அமைதியாக உட்கார வேண்டும் என்று தொண்டர்களிடையே கூறிக்கொண்டு வருகின்றனர்.

அப்போது திமுக அமைச்சரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை மறைமுகமாகச் சாடி பேசினார்.

திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இங்கு எதோ நமது வீட்டுத் திருமணம் நடப்பதைப் போல் நினைத்து, நாம் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகிறோம். இதேநேரத்தில் இன்னொரு பக்கம் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லத் தேவையில்லை. அந்த பிரச்சினை குறித்து நான் பேசவும் விரும்பவில்லை.

அதில், தலையிட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எப்போதும் அழிந்து போயுள்ளனர். திமுக ஒருபோதும் அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம். திராவிட மாடல் குறித்து நாம் பெருமையோடு பேசி வருகிறோம் என்று  உரையாற்றினார்.