கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் வைப்பு

கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி கோவையில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 464 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,617 ஆக உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இதுவரை 2-வது தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், விரைவில் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்.

கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதனை சமாளிக்க அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தினமும், 300, 500 நபர்களின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.” என்றனர்.

இதேபோன்று இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தற்போது 750 படுக்கை, தயார் நிலையில் உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.