மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு ஜூலை 15 துவங்கும் என அறிவிப்பு

இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூ.ஜி.சி அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கான (CUET UG) நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15, 16, 19, 20, ஆகஸ்ட் 4, 5, 6, 7, 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 554 நகரங்களிலும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களிலும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மே 31ம் தேதி அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்களில் (இளநிலை பாடப்பிரிவுகள்) நுழைவதற்கான ஒரே தேர்வு இது என்பதால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின் பேரில் விண்ணப்பிப்பதற்கான பதிவு மீண்டும் ஒருமுறை கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் http://cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலமாக ஜூன் 23,24 அன்று விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், இரு நாள்களுக்குள் விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு cuetug@nta.ac.in என்ற ஹெல்ப்லைன் மின்னஞ்சல் மற்றும் 011-40759000 / 011-6922 7700 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.