அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பீஹாரில் ரயிலை கொளுத்தி போராட்டம்

மத்திய அரசு அறிமுக படுத்திய அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து, ராணுவ வேலைக்கு செல்ல விரும்புவோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு  ராணுவ வீரர்களை வேலைக்கு எடுப்பதற்காக அக்னிபாத் என்ற திட்டத்தை  அறிமுகப்படுத்தியது. பழைய திட்டத்துக்கு பதிலாக இதில் ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை எடுக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதாவது, நான்கு  வருட பணியில் 6 மாதம் பயிற்சி காலம் அடங்கும். இந்த காலகட்டத்தில் மாத சம்பளம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாயுடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.  4 வருட பயிற்சிக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுகாலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த பணியாளர்கள்  அதிகாரிகள் மட்டத்தில் இல்லாத மற்ற பணிகளில் இருப்பார்கள்.  ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது.

இத்திட்டத்தை  அறிமுகப்படுத்தியதை  தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ராணுவ வேலைக்கு செல்ல விரும்புவோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களும் அக்னிபாத் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பீஹாரில் இன்று அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் ரயிலை கொளுத்தி போராட்டம் நடத்தியதால் ,வன்முறை களமாக மாறியுள்ளது. மற்ற மாநிலங்களிலும் அக்னிபாத் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய திட்டத்தையே தொடர வேண்டும் என, எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு என்னென்ன சலுகைகள் பறிபோகின்றன?