எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?

தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற விவாதம் எழத்தொடங்கியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் முதல் பேரவைத் தேர்தல் நடந்த 1952 முதல் 1975 வரை காமராஜர் ஆதரவு, காமராஜர் எதிர்ப்பு என்பதே தமிழக அரசியல் களமாக இருந்தது. 1967 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சிகள் ஒன்று திரளாமல் காமராஜர் ஆதரவு, எதிர்ப்பு என சிதறி கிடந்ததால் காமராஜரால் எளிதில் வெற்றிப்பெற முடிந்தது.  அதன் பிறகு ராஜாஜி முயற்சியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டபோது காமராஜர் 1967 பேரவைத் தேர்தலில் தோல்வியை  தழுவ நேரிட்டது. ராஜாஜி முயற்சியால் சுதந்திர கட்சி, திமுக, இடதுசாரிகள், பார்வர்டு பிளாக், நெல்லை – குமரி நாடார் நலக்குழு, சோசியலிஸ்ட், சி.பா.ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டு காமராஜரை தோற்கடித்தன.

காமராஜர் மறைவுக்குப்பின் அவரின் சீடர்களான

ஜி.கே.மூப்பனார், பா.ராமச்சந்திரன் ஆகியோர் காமராஜர் வாக்கு வங்கியையும், திமுகவின் வாக்கு வங்கியை எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரும் சரிபாதியாக பிரித்துக்கொண்டனர்.  நான்குமுனை போட்டி அரசியலில் பா.ராமச்சந்திரனின் ஜனதா கட்சி தாக்குப்பிடிக்க முடியாமல் காணாமல் போனது. மூப்பனாரின் இந்திரா காங்கிரஸ், கூட்டணி அரசியலில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக மாறியது.

1977 க்குப் பின் எம்.ஜி.ஆர், கருணாநிதி என இரு துருவ அரசியல் உருவானது. 1977 முதல் 1988 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் வலுவான எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி செயல்பட்டு வந்தார். எம்ஜிஆருக்கு தொடர்ந்து அழுத்தங்களை  கொடுத்துக்கொண்டே இருந்தார். 1977 பேரவைத் தேர்தல் தோல்விக்குப்பின் இந்திரா  காங்கிரசோடு கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று எம்ஜிஆருக்கு அரசியல் அழுத்தம் கொடுத்தார்.  எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைக்கவும் அது உதவியது.

அதன்பிறகு 1980 பேரவைத் தேர்தல் தோல்விக்குப்பின் நடந்த  இடைத்தேர்தல் அண்ணாநகர், மயிலாடுதுறை  தொகுதிகளில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணியை மீறி திமுகவை வெற்றி பெற செய்தார் கருணாநிதி. திருச்செந்தூரில் வைரவேல் திருட்டு தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணியபிள்ளை கொலை செய்யப்பட்டு கேசவ ஆதித்தன் எம்.எல்.ஏ. இறந்தபோது அதற்கு விசாரணைக் குழுவை அமைத்தார் எம்.ஜி.ஆர்.  அந்த குழுவின் அறிக்கை அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக இருந்ததால் அதை எம்.ஜி.ஆர் வெளியிடவில்லை. தனக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அந்த அறிக்கையை பேரவையில் கருணாநிதி வெளியிட்டார்.

அது அடுத்து வந்த திருச்செந்தூர் தொகுதி இடைதேர்தலில் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. இதற்காகவே, உயர் சாதி பிரிவில் இருந்த கிறிஸ்தவ நாடார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து வியூகம் அமைத்து அதிமுகவை 2,000 வாக்குகளில் எம்.ஜி.ஆர் திக்குமுக்காடி வெற்றிபெற செய்தார். அப்போது கிறிஸ்தவர்களின் வாக்குகளை  பெற இந்து  முன்னணி மாநாட்டுக்குக்கூட தடை விதித்தார் எம்.ஜி.ஆர்.

1986 உள்ளாட்சித் தேர்தல், மேல்சபை தேர்தல் ஆகியவற்றில் திமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.  இதுபோல, சாதி, இனம், பணம் ஆகியவற்றையும் மீறி கருணாநிதி மேலான பற்றுதலில் அரசியல் நடந்த காலகட்டம் அது.

இப்போதைய காலகட்டத்தில் அவ்வப்போது போராட்டங்களை நடத்தினாலும் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற தோற்றம் உருவாகியுள்ளது. அதற்கு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றமே காரணம்.  இதுவரை இரு துருவ  அரசியலாக இருந்த களம் இப்போது பல முனை போட்டி களமாக உருவாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு கருணாநிதி, ஜெயலலிதா அரசியல் தொடங்கியது. இந்த அரசியல் சற்று ஆதாய நோக்குடன் நடந்த அரசியல் எனக்கூறலாம். இந்த அரசியலில் 1991 முதல் 1996 வரை எதிர்க்கட்சித் தலைவராக சரியாக செயல்படவில்லை கருணாநிதி. முரசொலியில் உடன் பிறப்புகளுக்கு கட்டுரை எழுதுவதை தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை. அக்காலக்கட்டத்தில் தேசிய திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் மேல் மட்டத்திலும்,  பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவில் இருந்து வெளியேறி இருந்த  பி.எச்.பாண்டியன், கே.ராஜாராம், திருநாவுக்கரசு போன்றவர்களே கீழ்மட்ட அரசியல் செய்துகொண்டிருந்தனர்.

ஆனால், பேரவைத் தேர்தல் நெருங்கியபோது திடீரென அரசியல் சூழ்நிலை மாறி மூப்பனார் தலைமையில் தமாகா உருவாகி திமுகவுடன் கூட்டணி அமைத்ததால் திமுக வெற்றிபெற்றது.  அதேபோல மாநிலம் தழுவிய உள்கட்டமைப்பு மற்றும் வாக்கு வங்கி கொண்ட கட்சியாக இருந்ததால் திமுகவால் வெற்றியை வசப்படுத்த முடிந்தது.

அதேபோல 1996 முதல் 2001 காலகட்டத்தில் ஜெயலலிதாவும் பெரிய அளவில் எதிர்க்கட்சி அரசியலை செய்யவில்லை.  1998 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக அறிவித்து வெற்றிபெற்றார். ஆனால், 1999 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. 2001 பேரவைத் தேர்தலுக்கு முன்பு தமாகா, பாமக, காங்கிரஸ்,   இடதுசாரிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து அணியை கட்டமைத்ததால் கடைசி 6 மாதத்தில் அதிமுகவுக்கு வெற்றியை கொடுத்தது.

அதேபோல 2001 முதல் 2006 வரை திமுக அவ்வப்போது எதிர்க்கட்சி அரசியலை செய்து வந்தது. கருணாநிதி கைதுக்கு எதிரான போராட்டம், சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் மா.சுப்பிரமணியனை நிறுத்தி கடும் போட்டியை கொடுத்தது, 2004 மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடித்தது என தொடர்ந்து எதிர்க்கட்சி அரசியல் செய்து வந்தார் கருணாநிதி.  ஒருமுறை கருணாநிதியின் சட்டப்பேரவை அலுவலகத்தில் கல் எறிந்ததை கூடபெரிய அரசியலாக மாற்றினார் கருணாநிதி.

ஆனால், 2006 பேரவைத் தேர்தலுக்கு முன்பு மதிமுக, அதிமுக அணிக்கு கடைசி நேரத்தில் தாவியதாலும், தேமுதிக என்ற புதிய கட்சி உதயமானதாலும் திமுகவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.  2006 முதல் 2011 காலகட்டத்தில் ஜெயலலிதா பெரிய அரசியலை செய்யவில்லை.  மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய இடைத்தேர்தல்களில் அதிமுகவை இரண்டாவது இடம் கொண்டுவரவே சிரமப்பட்டார் ஜெயலலிதா.  பென்னாகரத்தில் அதிமுக டெபாசிட் இழந்தது.

2009 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் திமுகவை கலைக்க முடியும் என்ற நம்பபிக்கையில் மதிமுக, பாமக, இடதுசாரிகளுடன் அணி அமைத்து போட்டியிட்டார் ஜெயலலிதா.  இருப்பினும் அதுவும் கைகூடவில்லை.  இருப்பினும், 2011 பேரவைத்தேர்தலில்  கடைசி நிமிடத்தில் தே.மு.தி.க உடன் கூட்டணி அமைத்து மதிமுகவை பேரவைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு செய்தார் ஜெயலலிதா.

அதன்பிறகு 2001 முதல் 2016 வரை கருணாநிதி செயல்படக்கூடிய நிலையில் இல்லை. ஸ்டாலின் தான் சற்று செயல்பட்டு வந்தார்.  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்தும்  சரியாக செயல்படவில்லை.  இப்படிப்பட்ட சூழலில் 2013, 2014 காலகட்டங்களில் பெரிய அளவில்  எதிர்ப்பு இல்லை.  2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பின் ஸ்டாலினும் அரசியல் களத்துக்குள் பெரிய அளவில் வரவில்லை.  2015 இல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாமல் ஒதுங்கியது.  2016 காலகட்டத்தில் அரசியல் வியூக வகுப்பாளர் சுனில் உதவியுடன் நமக்கு நாமே திட்டத்தை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பபயணம் செய்தார் ஸ்டாலின். இதன் பயனாக 2016 இல் திமுக கணிசமான வெற்றியை பெற்றதால் ஸ்டாலின் செயல்படத் தொடங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா சிறை செல்லும் வரை அமைதியாக இருந்த ஸ்டாலின், எடப்பாடி எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்பதை கையில் எடுத்து தீவிர களப்பணியாற்றினார். இருப்பினும் 2017 இல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும் நிலைக்கு மாறியது. வலுவான வேட்பாளரை களம் இறக்காமல் தொண்டரை களம் இறக்கியதால் இந்த நிலை உருவாகியது.

கள அரசியலில் 2019 வரை சிறப்பாக செயல்பட்ட ஸ்டாலின், கொரோனா  காலகட்டத்தில் முழுமையாக இயங்க முடியவில்லை. அது எடப்பாடிக்கு ஒரு பலமாக மாறியது.  கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக அரசியல் செய்ததால் எடப்பாடியும் தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன்பிறகு நடந்த வேலூர் மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு திமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

2019 மக்களவைத் தேர்தலில் பெரிய வெற்றியை திமுக பெற்றபின்னர் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியது. எம்.ஜி.ஆர் – கருணாநிதி, ஜெயலலிதா – கருணாநிதி என இரு துருவ அரசியலாக இருந்த தமிழக அரசியல் களம் பல்முனை போட்டி நிறைந்த களமாக உருவாகியுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றிப்பாதைக்கு  அழைத்துச்சென்று தனது அரசியல் திறமையை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி.

2021 பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது.  எடப்பாடி தலைமையிலான கூட்டணி தோற்றாலும் 40 சதவீத வாக்குகளைப் பெற்று 75 இடங்களுடன் ஸ்டாலினுக்கு அடுத்தத் தலைவராக எடப்பாடி உயர்ந்தார்.  6.85 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்துக்கு உயர்ந்தார் சீமான்.

இப்போதைய காலகட்டத்தில் அவ்வப்போது போராட்டங்களை நடத்தினாலும் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை  என்ற தோற்றம் உருவாகியுள்ளது. அதற்கு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றமே காரணம்.  இதுவரை இரு துருவ  அரசியலாக இருந்த களம் இப்போது பல முனை போட்டி களமாக உருவாகியுள்ளது.

அதிமுகவும் தினசரி  எதிர்க்கட்சி அரசியலை செய்யவில்லை. எப்போதாவது பெரிய போராட்டங்களை நடத்திவிட்டு அமைதியாகி விடுகிறது. 2021 பேரவைத் தேர்தலுக்குப்பின் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் திமுக  மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  இருப்பினும் அதிமுக 2 வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆனால், மெல்ல மெல்ல பாஜகவும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

பாஜகவை வலுவாக தமிழகத்தில் வேரூன்ற வைக்கும் நோக்கத்தில், ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா  செய்துவிட்டு வந்த கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த அண்ணாமலையை மாநிலத் தலைவராகவும்,  அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராகவும்  நியமித்து தமிழகத்தில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது பாஜக. இது அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியாகவே உள்ளது.

வாக்கு வங்கி அடிப்படையில் 2021 பேரவைத் தேர்தல்படி அதிமுக 33 சதவீதத்திலும்,  பாஜக 2.6 சதவீதமாகவும் உள்ளது. ஆனாலும், ஸ்டாலினுக்கு போட்டி அண்ணாமலை தான் என்ற பேச்சு ஊடகங்களில் எழத்தொடங்கியுள்ளது.

திருவாரூரில் ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டுவதற்கு எதிரான போராட்டம்,  பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி போராட்டம், பட்டின பிரவேசத்தை நடத்த அனுமதி கோரி  குரல் கொடுத்தது,  என தொடர்ந்து  ஸ்டாலினுக்கு போட்டி அண்ணாமலை தான் என்ற கட்டமைப்பு ஊடகங்களில் வந்து வருகிறது.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிட்டப்பின் தில்லி பாஜக துணையோடு 5 சதவீத வாக்குகளை பெற்று அதிமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது தமிழக பாஜக.

மேலும், 5 சதவீத வாக்குகள் பெற்று பாஜக மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதை மு.க.ஸ்டாலினே அங்கீகரித்துள்ளார்.  உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் அண்ணாமலையா, எடப்பாடியா என்ற வாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தான், அ.தி.மு.க மூத்தத் தலைவர் சி.பொன்னையன், எடப்பாடியின் மனசாட்சியான ஜெயக்குமார் ஆகியோர் பாஜகவை விமர்சித்துள்ளனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க மாநிலத் தலைவர்களான வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் 4 எம்.எல்.ஏ- க்களை வைத்திருக்கும் நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என பதிலடி கொடுத்துள்ளனர்.  இவ்வாறாக செயல்படும் எதிர்க்கட்சி யார் என்பதில் எடப்பாடி, அண்ணாமலை இடையே நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

அண்ணாமலை மேல்மட்டத்திலும், சீமான் கீழ்மட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார்கள் என்ற தோற்றம் உருவாகியுள்ளது. இப்போதைக்கு அதிமுக தான்  உண்மையான எதிர்க்கட்சி என்ற வாதம் உண்மை என்றாலும் அடுத்து வரும் மக்களவை,  பேரவைத் தேர்தல்கள் தான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டது யார் என்பதற்கான விடையை தேடி தரும் என்பது மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மை.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும்,  கட்சித் தலைமை என்ற நிலையில் இரட்டைத் தலைமையாக  இருப்பதாலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அதிரடி அரசியல் களமாடுதல்,  சுமார் 7 சதவீதமாக வளர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி, பாமக இளம் தலைவர் அன்புமணி,  அமமுக பொதுச்செயலர் டி.டி.வி தினகரன் என ஸ்டாலினுக்கு எதிராக பலமுனை போட்டியாக அரசியல் களம்  உருவாகியுள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாமல் இருந்தாலும் மாநிலம் தழுவிய தலைவராக, வாக்காளர்களை சுண்டி இழுக்கும் திறமை படைத்த தலைவர்களாக இருந்தனர்.  அதிமுக, திமுகவுக்கும் மாநிலம் தழுவிய கட்டமைப்பு இருந்ததால் மீண்டும் அடுத்தத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடிந்தது. தேமுதிக தலைவராக விஜயகாந்த் செயல்படாத நிலையில் அடுத்த முறை கட்சி காணாமல் போனது.

மாநிலம் தழுவிய வாக்கு வங்கி, கட்டமைப்பு கொண்ட கட்சியாக அதிமுக இருந்தாலும் வசீகரம் கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி இல்லை. மேலும் கட்சியும் இரட்டைத் தலைமையாகவே இருக்கிறது. எனவே, இதுபோல செயல்படாமல் இருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.