ஏய் குருவி! சிட்டுக்குருவி!

அரிசி புடைத்து சோறாக்கிய, அப்பத்தாவோட பறந்துவிட்டன சிட்டுகுருவிகளும்.  இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் குருவி, என்றொரு பறவை இருக்கிறது என்றால், தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக சென்னை போன்ற பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்க முடியும்.

நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் கிராமங்களில் சிட்டுக் குருவிகள் இன்னமும் இருப்பதே ஆகும். ஆனால், சென்னை  கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டுக் குருவிகளின் கோட்டையாகவே இருந்தது, என்பது இப்போது வெறும் வரலாற்று பதிவாகிவிட்டது.

அப்போதெல்லாம் சிட்டுக் குருவியின் “கீச் கீச்” குரல்களில்தான் குழந்தைகள் கண் விழித்தார்கள். இப்போதெல்லாம் செல்போன் அலாரம்களில் தான் சிட்டுக் குருவின் ஓசையை கேட்க முடிகிறது. நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.

பறவைகள் என்றாலே அழகுதான், அதுவும் சிட்டுக் குருவிகள் மனிதனின் இருப்பிடத்திலேயே கூடு கட்டி வாழ்வதால், அவை மனதுக்கு இன்னும் நெருக்கமானவை. அப்படியான சிட்டுக் குருவிகள் நம்மிடையே இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டன.

இந்தியாவிலுள்ள 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வொரு  ஆண்டும் மார்ச் 20ம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது. முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும்

பெரும்பாலும், கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து, அதில் மண்குளியல் நடத்தும்.

மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு, இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன. செல்போன்களின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைப்பதாகவும், முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பறவைகள் ஆராய்ச்சியாளர் ஜெகன்நாதன் கூறுவது “சிட்டுக்குருவிகள் குறைவதற்கான காரணங்களாக நகரமயமாதல், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு’’ என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கள ஆய்வில்தான் இதை அறிய முடியும்.

நகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்துபோனது, அவை கூடமைக்க ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது” என்கிறார் அவர்.

முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கும் போது, தானியங்களும் அதிகம் சிந்தும். சிட்டுக்குருவிகளுக்கு உணவும் கிடைத்தது. இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவு, அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் மெல்ல நகரங்களைக் காலி செய்யத் தொடங்கின.

கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.