இது மக்களின்  சொத்து  உங்களின் சொத்தல்ல –  எம்.பி.   சு.வெங்கடேசன்

உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல, தனியார் பக்தி மட்டுந்தான் என, சு.வெங்கடேசன் எம்.பி காட்டமாக ட்விட் செய்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது. மற்றொரு ரயில் வரும் ஜூன் 21ம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு நேப்பாள் நாட்டில் நுழைந்து 12 முக்கிய ராமர் ஸ்தலங்களில் பயணிக்கிறது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது; இந்த சிறப்பு ரயில் வரும் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சாய்நகர் ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு 7 மணிக்கு , ஈரோடு 8 மணிக்கு , சேலம் 9.15 க்கும். 15.6.2022 அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10 மணிக்கு  புறப்பட்டு, எலகங்கா அதிகாலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும். 16.6.2022 அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியை சென்றடையும்.

அதேபோல் மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவுக்கும். 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் என, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், ‘ரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ரயில்வே நிர்வாகமே உத்தரவைத் திரும்பப்பெறு எனத் தெரிவித்துள்ள வெங்கடேசன்.  ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம் எனக் கூறியுள்ள எம்.பி. சு.வெங்கடேசன், உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல, தனியார் பக்தி மட்டுந்தான் என, தெரிவித்துள்ளார்.