மீண்டும் ஊரடங்கா? பள்ளிகள் திறக்கப்படுமா? மக்களின் கேள்வி

தமிழ் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில், கொரோனா 4ஆவது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கான்பூர் ஐஐடி உள்ளிட்டவை தெரிவித்துள்ளது. இதனால் 4 வது அலை வராமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை தீவிரமாக இருந்த நிலையில் அதை எப்படியோ கட்டுக்குள் கொண்டு வந்தது மாநில அரசு. இதையடுத்து மக்களின் ஒத்துழைப்பு மற்றும் மாநில அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 3 வது அலை பெரியாத பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வழக்கம் போல் அனைத்துப் பணிகளும் தடையின்றி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நூறுக்கு கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக  தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலாளர், பிற அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திடீரென பாதிப்பு அதிகரிப்பதும், முதல்வர் ஆலோசனை நடத்துவதும் பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

கொரோனா அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து இந்த ஆலோசனை நடைபெறலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.