கோவை ஜி.என் மில்ஸ் மேம்பாலம் நான்கு மாதங்களில் முடிவடையும் என தகவல்

கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை அடுத்த ஒன்பது மாதங்களில் முடிக்க அறிவுறுத்தபட்டிருப்பதாகவும், ஜி.என் மில்ஸ் மேம்பாலம் நான்கு மாதங்களில் முடிவடையும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளபட்டதோடு ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடத்தபட்டுள்ளது. இரண்டு நாட்களாக பதிவான கருத்துக்களை சட்டமன்றத்தில் பதிவாகும் வரை வெளிப்படையாக கூற முடியாது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பேருந்து வசதி குறித்த கோரிக்கைகள் தான் அதிகமாக வந்துள்ளது.

தென்னை விவசாயிகளின் பிரச்னைகளில் ஒன்றான கொப்பரைத்தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து பேசி இருக்கிறோம். பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பெரியநாயக்கன்பாளையம் பாலத்தை ஒன்பது மாதங்களில் கட்டிமுடிக்க அறிவுறுத்தபட்டிருக்கிறது.

ஜி.என் மில்ஸ் மேம்பாலம் நான்கு மாதங்களில் முடிக்கப்படும். கோவையில் இருந்து நாகப்பட்டினம் வரை உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழித்தடம் ஒன்றை தொழில்துறையினர் கேட்டுள்ளனர். முந்தைய காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக 184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியவந்தது. எந்த நோக்கத்துக்காக பணம் வாங்கப்பட்டதோ அதற்காக இல்லாமல் வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களையும் கோவை மாநகராட்சி கூறியிருக்கிறது என தெரிவித்தார்.