நவி மியூச்சுவல் ஃபண்ட்: புதிய நிதித் திட்டம் கோவையில் அறிமுகம்

பெங்களூரைச் சேர்ந்த நவி மியூச்சுவல் ஃபண்ட் (Navi Mutual Fund) நிறுவனம் நவி யு.எஸ்.டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட் (Navi US Total Stock Market Fund) என்னும் புதிய நிதித் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, வர்த்தக நிதி பரிவர்த்தனை மையமான வான்கார்ட் டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் இ.டி.எஃப்.-ல் (Vanguard Total Stock Market ETF) முதலீடு செய்யப்பட உள்ளது.

இந்த நிதிக்கான செலவு விகிதம் தற்போதைய சூழ்நிலையில் ஆண்டுக்கு 0.06 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனவும் இந்தப் புதிய நிதி ஆஃபர் திட்டமானது, பிப்ரவரி 4-ந்தேதி முதல் துவங்குகிறது என்றும் நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் திரட்டப்பட உள்ள நிதியை பெரிய, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்தாலும், ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், அமேசான், பேஸ்புக் மற்றும் டெஸ்லா போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கும் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நவி குழுமத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறுகையில், “குறைந்த விலை குறியீட்டு நிதியின் உலகளாவிய முன்னோடியான வான்கார்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

நவி யு.எஸ். டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட் திட்டத்தின் மூலம் முதன்முறையாக இந்திய சில்லறை முதலீட்டாளர்கள், முழு அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். முதலீட்டாளர்களுக்கு குறைந்த செலவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம் ஆகும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிக்கப்படும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எங்கள் நிறுவனத்தால் இந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ள மூன்றாவது நிதித் திட்டம் இதுவாகும்.

இந்த ஜனவரி மாதத் துவக்கத்தில் நவி நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Next 50 Index Fund) மற்றும் நவி நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Bank Index Fund) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம். இவை இரண்டும் அந்தந்தப் பிரிவுகளில் அன்றைய தேதியின்படி குறைந்த விலை குறியீட்டு நிதித் திட்டங்களாகும். மேலும் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மேலும் 3 புதிய நிதித் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Source: Press Release