பார்க் கல்லூரியில் நிறுவனர் தினவிழா

பார்க் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நிறுவனர் தினம் “நதிமூலம்” என்ற விழாவாக, ராஜீவ் காந்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

கல்லூரி ​முதல்வர் வரவேற்புரையாற்றினார். பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இவர், பிரேமா ரவி ஆகியோர் இணைந்து 1970 ஆண்டு  பார்க் குழுமத்தின் முதல் பள்ளியை துவக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பிரேமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் ​முன்னாள் மாணவி வழக்குரைஞர் தேன்மொழி தனது பள்ளி அனுபவம் மற்றும் நிறுவனர்களின் உறவு பற்றி பகிர்ந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15-வேலம்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணிக்கு “பிரேமா நினைவு விருது” வழங்கப்பட்டது. அரசு பள்ளியினை விரிவாக்கம் செய்வதற்கு தன் சொந்த முயற்சியால் 1 கோடி ரூபாய் வசூலித்து குழந்தைகளுக்கு வகுப்பறை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஆர்.கே.ஆர் ​கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமசாமி பேசுகையில், பிரேமா அவர்கள் அனைத்து விதங்களிலும் தலைவரின் வெற்றிக்கு தூணாகவும், முதுகெலும்பாகவும் இருந்தார். அதேபோல் இந்த கூட்டத்தில் பல ரவி​கள் உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக டாக்டர்.ரவி அவர்களுக்கு “பரிவட்டம் மரியாதை” செய்யப்பட்டது. பார்க் கல்வி நிறுவங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி பேசுகையில், தனது வெற்றிக்கு தனது ​தாயார் பெரும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார். இந்த தைரியம், அறிவு, ஆற்றல் மற்றும் தனது புதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம் ஆகியவை தனது தாயார் மூலம் உள்வாங்கிக் கொண்டதாக கூறினார். பொதுவாக நிறுவனர் தினம் நிறுவனங்களின் பிறந்த நாளில் கொண்டாடப்படும். ஆனால்  பார்க் கல்வி நிறுவங்களின் நிறுவனர் தினமானது அவர்களது திருமண நாளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு என தெரிவித்தார். மேலும், இந்த விழாவின் நோக்கம், நிறுவனர்கள் பல தடைகளை கடந்து வெற்றிகண்டதுபோல நாமும்  வாழ்க்கையில் சோதனைகளை வென்று வெற்றிபெற என தெரிவித்தார்.