குழந்தைகளின் நலனுக்கு பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் – ஐசிஎம்ஆர்

கொரோனா தொற்றின் காரணமாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ICMR) சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சார்ந்த நிபுணர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிப் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், பள்ளிகளை திறப்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பள்ளிகளில் குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலை மற்றும் கொரோனா அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 500 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், இதனால் 32 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும், தொலைதூர குக்கிராமங்கள், சேரிகளை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. எனவே, குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேசமயம், பள்ளிகளில் குழந்தைகளின் உடல்நலன், கொரோனா அறிகுறிகளை கண்காணிக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உள்ளூர் கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது மட்டும் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.