குழந்தைகளை பள்ளிக்கு வரக்கூறி கட்டாயப்படுத்த கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான சிறப்பு கலந்துரையாடலை சி.ஐ.ஐ அமைப்பு ஏற்படுத்தியிருந்தது. கோவையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினருடன் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளி திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர். பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே அடுத்தகட்ட முடிவு செய்யப்படும்.

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவிட கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு வர ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான சட்டப் போராட்டம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது என கூறினார்.