“எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை மேம்படுத்தினால் பொருளாதாரம் வளரும்”

கோவையில் நடைபெற்ற தொழில்துறை மேம்பாட்டு கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை அன்று கலந்து கொண்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மேற்கு மாவட்டங்களின் தொழில் துறையினருக்கான கூட்டம் கோவையில் முதன்முறையாக நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றால் நாடு எப்போதும் இல்லாத வகையில் சவால்களை சந்தித்து வருகிறது. புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும்.

தொழில்முனைவோர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.  எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை மேம்படுத்தினால் தான் பொருளாதாரம் வளரும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அந்த துறையை மீட்டெடுக்க வேண்டும். இது தான் தற்போது தமிழக அரசின் பிரதானமாக நடவடிக்கையாக உள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கோவை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் நீண்ட கால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.

வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் இந்த அரசு முனைப்பாக உள்ளது. கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனப் பேசினார்.