கோவையின் முதல் சூரியக் கோவில்!

மனிதனின் வாழ்வில் நிகழும் சுக, துக்கம் போன்ற பல விஷயங்களை நிர்ணயிக்கும் ஒன்றாக நவ கிரகங்கள் கருதப்படுகிறது.  கிரகங்கள் சரியாக இருந்தால் வாழ்க்கையில் சில தோஷங்கள் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது. கிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியனால் தான் அனைத்து ஜீவ ராசிகளும் உலகில் இயக்கம் பெறுகின்றன. அதேபோல காலத்தின் கடவுள் என்றும், சிவனின் மற்றொரு அம்சமாகவும் கருதப்படும் கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.  நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.

இந்த இரு தனித்துவமான தெய்வங்கள் கொண்ட கோவிலை கோவையில் முதல் முறையாக  போத்தனூர்  செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள  ஆறுபடை நகரில், சிவ சூரியன் டிரஸ்டின் அறங்காவலர் டாக்டர் வி. நாகராஜ் என்பவர் கட்டியுள்ளார். 2020ல் தொடங்கி 2021ல் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

பிணி நீங்குதல், வளம், விவசாயம், வெளிச்சம், உணவு இதுபோன்ற எல்லா விசயங்களுக்கும் முழுமுதற் கடவுளாக விளங்கும் சூரியன், கண்கண்ட தெய்வமாக உள்ளார். கோவையில் சூரியனை மூலவராக கொண்ட முதல் கோவிலாக  ‘சூரியனர் கோவில்’ உள்ளது. மேலும் இங்கு நவகிரகங்களையும் ஆட்சி செய்யக் கூடிய திறமை கொண்ட கால பைரவரும் உள்ளார்.  கால பைரவரின் தலையில் இருந்து கால் வரைக்கும் அவரது உடலில் 9 கிரகங்களும் உண்டு என்று சொல்லப்படுவது வழக்கம்.  தோஷங்களை கழிப்பதிலும், கஷ்டங்களை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பவராக கால பைரவர் திகழ்கிறார்.

சூரியனை வணங்குவதின் மூலம் பிற கிரகங்களின் வாயிலாக வரக்கூடிய தொந்தரவுகள் குறையும். எந்த கிரகத்தின் மூலம் தோஷம் ஏற்பட்டுள்ளதோ அதற்கு என்ன  பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும்  இந்தக் கோவிலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும், உடுத்த வேண்டிய ஆடைகளின் நிறங்கள் போன்றவற்றையும்  குறிப்பிட்டுள்ளனர்.

தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவருக்கு சிறப்பான அபிஷேகங்களும் இங்கு நடக்கும். தேய்பிறை அஷ்டமியில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. தேன், பால், சந்தனம், ஜவ்வாது போன்ற கால பைரவருக்கு பிடித்தமான  வாசனைப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.  பைரவருக்கு வடமாலை போன்றவையும் சாத்தப்படும்.

ஜாதகத்தில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் ராகுவிற்கு ஞாயிற்றுகிழமை அன்று மாலை 4.30 முதல் 6.00 மணி  வரை ராகு கால பூஜை நடைபெறும். மேலும் ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உகந்த நாள் என்பதால் சூரிய உதயத்தின் போது காலை 6 மணிக்கு சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மஞ்சள், ஜவ்வாது, பால், சந்தனம், கோதுமை போன்றவற்றை கொண்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

ஒரு சிலருக்கு சூரிய கிரகம் உச்சத்தில் இருக்கும் அவர்கள் சூரிய பகவானை வேண்டினால் நல்ல விசயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதற்கும் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக் கிழமை உண்டு. வார நாட்களில் காலை 6.30  மணியில் இருந்து  இரவு 8 மணி வரைக்கும் இக்கோவிலின் நடை திறந்து இருக்கும்.