மனிதநேயமே வாழ்வின் ஆதாரம்…

இவ்வுலகம் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் போன்றவற்றில் வளர்ந்துள்ளதோடு செய்யக்கூடிய எல்லா செயல்களுக்கும் ஏதோ ஒரு நவீன வசதி வந்துள்ளது. மாறிவரும் கலாச்சார சூழலுக்கு ஏற்பவும், சௌகரியத்திற்காகவும் இயந்திர வசதிகள் வந்திருந்தாலும், ஒரு மனிதனின் இதயத்தில் உள்ள அடிப்படை குணமான மனிதநேயம், பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்றவற்றை  மாற்றி விடமுடியாது. இந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா பெருந்தொற்று மோசமாக ஆட்டிப் படைத்து வருகிறது. ஆனால் இது போன்ற சமயங்களில் தான் மனிதர்களின் உண்மையான குண நலன்களை வெளிப்படையாகவே தெரிந்து கொள்ள முடிந்துள்ளது. அப்படி உதவி செய்த பல முகங்கள் இங்கு உள்ளன.

“நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வோம்” என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் கௌரி சங்கர் மற்றும் அவரது குழுவால் முன்னெடுத்து நடத்தப்படும் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

மத்திய அரசு சார்பில் மாவட்ட அளவில் சிறந்த இளைஞருக்கான விருதை இந்த அறக்கட்டளையின் பொது செயலாளர் கௌரி சங்கர் பெற்றுள்ளார். இவரது இந்த சேவையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்  பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

இவர்களின் பிற செயல்பாடுகள் குறித்து இவரிடம் கேட்டபோது, “எங்கள் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றிக்கு விண்ணப்பித்து பெற்று தருகிறோம்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வழங்கி அங்கிருப்பவர்களுடன் எங்களது நேரத்தைக் கழிக்கிறோம்.

இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி வருவதோடு, கோவில்களை சுத்தப்படுத்துதல், பூங்காக்கள் மற்றும் பள்ளி கூடங்களை சுத்தப்படுத்தி தருவது, நூலகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளையும் எங்கள் குழு செய்கிறது.

முதல் அலையில் 50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி இருக்கிறோம். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண உதவிகள் செய்தோம். இரண்டாவது அலையில் 46 நாட்கள் தொடர்ந்து எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கி வருவதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் உணவு வழங்கி வருகிறோம்.

இந்த அறக்கட்டளைக்காக வீட்டையே அலுவலகமாக மாற்றியுள்ளோம். எங்களது முன்னெடுப்பைப் பார்த்து  எங்களுக்கு நிதியுதவி செய்பவர்களும் இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

விழாக்கள் போன்ற  சுப நிகழ்வுகளை  சொந்த பந்தங்களுடன் மட்டுமே செலவழிக்காமல் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது  அங்கு இருப்பவர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தும். நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது. ஆனால் முடிந்தவரை உங்கள் அருகாமையில் இருக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள். என்ற கோரிக்கையை  இவர்கள் முன் வைத்தனர். இவர்களை தொடர்பு கொள்ள 99949  76720